வேப்பூரில் மகளிர் கல்லூரி அமைக்க விருத்தாசலம் எம்எல்ஏ வலியுறுத்தல்

வேப்பூரில் மகளிர் கல்லூரியும், விருத்தாசலத்தில் வேளாண்மைக் கல்லூரியும் அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் வலியுறுத்தினார்.

வேப்பூரில் மகளிர் கல்லூரியும், விருத்தாசலத்தில் வேளாண்மைக் கல்லூரியும் அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் விருத்தாசலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, அப்பகுதி விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யவும், நகர மக்களின் குடிநீர்ப் பிரச்னையை எதிர்கொள்ளவும் மணிமுத்தாறிலிருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும்.
விருத்தாசலத்தில் சுமார் 120 ஏக்கரில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி முதலான பயிர்களுக்கு புதிய விதைகள் கண்டுபிடிக்கப்படுகிறது. எனவே அந்த வளாகத்தில் வேளாண்மை கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் வேப்பூரில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
வட்டத் தலைமையிடமான வேப்பூர், மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். மங்கலம்பேட்டை பேரூராட்சியில் போதிய இடம் உள்ளதால் அங்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும். விருத்தாசலம் புறவழிச் சாலையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் தொடக்க வேண்டும்.
கடலூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தைப் பிரித்து விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளை உள்ளடக்கி, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு கோட்டப் பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலையை ரூ.3 கோடியில் அமைக்க வேண்டும். திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு 45 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம், பயிற்சியாளர் மற்றும் தங்கும்
விடுதி வசதியுடன்கூடிய உள் விளையாட்டரங்கமும் கட்டப்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com