மணிலா கொள்முதல் விலை சரிவு: விவசாயிகள் கவலை

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலாவுக்கான கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மணிலாவுக்கான கொள்முதல் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சுமார் 7,500 ஏக்கர் பரப்பில் மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் விளையும் மணிலாவில் எண்ணெய்ச் சத்து அதிகம் என்பதால், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்வது வழக்கம்.
 தற்போது, குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலா அறுவடை தீவிரமடைந்துள்ளது. இதனால் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 மூட்டைகள் மணிலாவை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில், புதன்கிழமை மணிலா கொள்முதல் செய்ய வந்த வெளிமாவட்ட வியாபாரிகளை உள்ளூர் வியாபாரிகள் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
 இதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம் நடைபெறுவது தடைபட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த மணிலா மூட்டைகளுக்கு டோக்கன் போடப்பட்டது.
 பிரச்னையை தவிர்க்கும் வகையில் உழவர் பேரியக்க மாநிலச் செயலர் வி.கே.குமரகுரு, உழவர் மன்றத் தலைவர்கள் ஆர்.கே.ராமலிங்கம், சி.ஜெயவேல், ஆர்.தேவராஜா, சி.பஞ்சாச்சரம், முன்னோடி விவசாயி ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் போலீஸார் முன்னிலையில், குறிஞ்சிப்பாடி ஒருங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆனந்த சிவசங்கர் ஏலம் நடத்தினார்.
 இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: ஒரு மூட்டை (80 கிலோ) மணிலாவை ரூ.7,500-க்கு விற்பனை செய்தால்தான் ஓரளவு லாபம் கிடைக்கும். தற்போது, சராசரியாக ரூ.6,300-க்கு மட்டுமே விலை போகிறது. புதன்கிழமை நடைபெற்ற பிரச்னையால் வெளியூர் வியாபாரிகள் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்கவில்லை.
 இதனால், சராசரியாக மூட்டை ஒன்றுக்கு ரூ.400 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
 இதுகுறித்து ஒருங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆனந்த் சிவசங்கர் கூறியதாவது: விவசாய சங்கப் பிரதிநிதிகள், காவல் துறையினர் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டது. மணிலா மூட்டைகள் தரத்துக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6,800 வரை விலைபோனது. மணிலா ஈரப்பதத்துடன் உள்ளதே விலை குறைவுக்குக் காரணம் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com