கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் ஆய்வு

விருத்தாசலம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 இந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள், தன் பதிவேடு பராமரித்தல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது
 மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடமும் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.
 இதனைத் தொடர்ந்து, விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், அவர்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது, சிறு, குறு விவசாயிகள் இருவருக்கு வறட்சி நிவாரண நிதியைப் பெறுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார். மேலும், அலுவலகங்களில் பெறப்படும் மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
 விருத்தாசலம் கோட்டாட்சியர் கிருபானந்தம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ப.காந்தி, வட்டாட்சியர் எம்.பன்னீர்செல்வம், உதவிச் செயற்பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
 வாக்குப் பதிவு இயந்திரங்கள்
 இந்த ஆய்வின் போது, விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனக் கிடங்கில், பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் த.பொ.ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது, கிடங்கினுடைய உள்பகுதியின் நிலை, கதவுகள் சரியாக உள்ளனவா என்பதையும், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் அவர் ஆய்வு செய்தார்.
 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த ஆய்வு நடைபெற்றதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com