ஆதார் எண் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை: மாவட்ட ஆட்சியர்

ஆதார் எண் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறினார்.

ஆதார் எண் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறினார்.
 வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் உர விற்பனையை நேரடி உர மானியத் திட்டத்தின்கீழ் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வேளாண்மைத் துறை மற்றும் "ஊஅஇப' உர நிறுவனம் இணைந்து உரம் விற்பனையாளர்களுக்கு விற்பனை முனை கருவியை வழங்குகின்றன.
 இந்தக் கருவியின் மூலமாக உரம் விற்பனை மேற்கொள்வது தொடர்பான உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாம், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தொடக்கி வைத்தார்.
 பின்னர் அவர் பேசுகையில், ஜூன் மாதம் முதல் விவசாயிகள் தங்களது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு மூலம் மட்டுமே தேவையான உரங்களை வாங்க இயலும். உரம் விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை முனை (பி.ஓ.எஸ்) கருவியின் வாயிலாகவே உரம் விற்பனை செய்து அவர்களுக்கு ரசீது அளிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறையின் செயல்பாடுகள் குறித்து வட்டார அளவில் உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
 இந்தக் கருவியின் மூலம் உரம் விற்பனை மேற்கொள்ளப்படுவதால், உரங்களின் இருப்பு விவரத்தை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க இயலும். இதனால் தேவைப்படும் பகுதிகளுக்கு விரைவாக உரங்களை கொண்டு செல்ல இயலும்.
 ஆதார் எண் அடிப்படையில் உரம் வாங்குவதால் வாங்குபவரின் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயம் அல்லாத பிற உபயோகங்களுக்கு மானியத்துடன் கூடிய உரங்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
 மேலும் கடையில் இருப்பில் உள்ள உரம், கருவியில் பதிவான விற்பனை இருப்பு அளவோடு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்படும். உரம் இருப்பு மற்றும் விலை விவரங்களை விவசாயிகளின் பார்வையில் படும் வண்ணம் விலை விவரப் பலகையில் தெரியப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையிலும், சரியான எடையிலும் உரங்கள் விநியோகிப்பதை அனைத்து உர விற்பனையாளர்களும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தின் உணவு தானிய உற்பத்திக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
 முகாமில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ந.கனகசபை முன்னிலை வகித்தார். முன்னதாக, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ஜி.துரைசாமி வரவேற்க, வேளாண்மை அலுவலர் (தரக் கட்டுப்பாடு) எஸ்.அமிர்தராஜ் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com