உணவுப் பாதுகாப்பு துறையில் வியாபாரிகள் உரிமம் பெறுவது அவசியம்: மாவட்ட ஆட்சியர்

வியாபாரிகள் உணவுப் பாதுகாப்புத் துறையில் அவசியம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

வியாபாரிகள் உணவுப் பாதுகாப்புத் துறையில் அவசியம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு - மருந்து நிர்வாகத் துறையின் மூலம் உணவுப் பொருள்களைக் கையாளும் நிறுவனங்களுக்கு உரிமம், பதிவுச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
மளிகைக்  கடை, பெட்டிக் கடை, குளிர்பானங்கள், பால் பொருள்கள், இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் விநியோகிப்பவர்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள், இனிப்பு, பலகாரக் கடைகள், பேக்கரி நிறுவனங்கள், பழக் கடைகள், பழ மண்டிகள், திருமண மண்டபங்கள், சில்லறை விற்பனையாளர்கள், நடமாடும் தள்ளுவண்டிகள் ஆகிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம், பதிவுச் சான்று பெற வேண்டும்.
அதுபோல, அரசின் மூலம் நடத்தப்படுகின்ற டாஸ்மாக் மதுக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், கருணை இல்லங்கள், அன்னதான மையங்கள், அரசு விடுதிகள் உள்ளிட்ட உணவு விற்பனை - கையாளும் நிறுவனங்களும் உரிமம், பதிவுச் சான்று பெறுவது அவசியமாகும்.
ஆண்டு வர்த்தகம் ரூ. 12 லட்சத்துக்குக் குறைவாக விற்பனை செய்து, கொள்முதல் செய்வோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100
செலுத்தி, பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து, பதிவுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 12 லட்சத்துக்கு அதிகமாக கொள்முதல் செய்வோர் உரிமக் கட்டணமாக ரூ. 2ஆயிரமும்,  தயாரிப்பாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற வகையில், உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
உரிமம், பதிவுச் சான்றை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால், நீர் சம்பந்தமான தொற்று நோய்கள் வராமல் இருக்க உணவகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் 17,210-க்கும் மேலான உணவு வணிகர்கள் உள்ளனர்.  இதுவரை பாதுகாப்பற்ற, தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 61 வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்திலும், 23 வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.  இதுவரை அபராதமாக ரூ. 3.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.  
பொதுமக்கள் உணவுப் பொருள்கள் தொடர்பான புகார்களை உணவுப் பாதுகாப்பு துறைக்கு - 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு  04142 - 221081 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.  புகார் செய்யும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com