வில்வநகரில் தேங்கிய மழை நீர்: களமிறங்கிய பொதுமக்கள்

கடலூர் நகராட்சிக்கு உள்பட்ட வில்வநகர் பகுதியில் தேங்கிய மழை நீரை அப்பகுதி மக்களே அகற்றினர்.

கடலூர் நகராட்சிக்கு உள்பட்ட வில்வநகர் பகுதியில் தேங்கிய மழை நீரை அப்பகுதி மக்களே அகற்றினர்.
கடலூர் நகரில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. முறையான வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வில்வநகர் பாப்பான் தோட்டம் பகுதியில் முறையாக சாலை அமைக்கப்படாததால், சாலையின் நடுவில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருபுறமும் மேடாக்கி நடுப்பகுதியை பள்ளமாக்கி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. வடிவதற்கு வழியில்லாத நிலையில் அங்கேயே நீண்ட நாள்களாக தேங்குகிறது. அத்துடன், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலக்கும்போது துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.
 தற்போதும் அதேபோல துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், அப்பகுதியினர் கடலூர் நகராட்சியிடம் முறையிட்டனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியினரே வாளி உள்ளிட்ட பாத்திரங்களில் தேங்கியிருக்கும் நீரை எடுத்து, வேறு பகுதியில் ஊற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் மழை நீரை முழுமையாக அப்புறப்படுத்தினர்.
 இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அறிவு என்பவர் கூறியதாவது: மழைக் காலத்தில் வில்வநகர் பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இங்கு, முறையான வடிகால் வசதி இல்லை. இதனால், தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பில்லை. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com