புத்தகத் திருவிழாவில் கண்டறியப்பட்ட குழந்தை விமர்சகர்கள்

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 50 குழந்தை விமர்சகர்கள் கண்டறியப்பட்டனர்.

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 50 குழந்தை விமர்சகர்கள் கண்டறியப்பட்டனர்.
 பல்வேறு அமைப்புகள் சார்பில், கடலூர் நகர அரங்கில் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா நவ.10- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக புத்தக அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இதில், பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்கள் தொடர்பான 50 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த 50 புத்தகங்களையும் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் விமர்சனம் செய்து பேசும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 35 பேர் , தனியார் பள்ளி மாணவர்கள் 15 பேர் புத்தகங்கள் குறித்து விமர்சனம் செய்து பேசினர்.
 இதில், அரசுப் பள்ளி மாணவிகள் கனிமொழி அமைதி எவ்வளவு பலம் வாய்ந்தது என்றும், மாணவி தமிழ்காவ்யா, அப்துல்கலாம் புத்தகத்தை எவ்வாறு நேசித்தார் என்றும், மாணவர் ஸ்ரீவினோத், என் வகுப்பறை என்றத் தலைப்பிலும் பேசினர். நிகழ்வில் பேசிய மாணவ, மாணவிகள் அனைவரும் புத்தகங்களில் எடுத்தாளப்பட்ட கருத்துக்களைக் கூறியதோடு, எந்தவிதமான கருத்துக்களை அதில் கூடுதலாக சேர்த்திருக்கலாம். எந்த கருத்துக்கு அழுத்தம் குறைவாகக் கொடுத்திருக்கலாம் என்று தங்களது பார்வை தொடர்பாகப் பேசினர்.
 மதியம் நடைபெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சியில், குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு செயலர் ஜெயந்தி ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இதில், பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மு.மருதவாணன் முன்னிலை வகிக்க, கேதரின் ஒருங்கிணைத்தார்.
 மாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆயிஷா ரா.நடராஜன் தலைமை வகித்தார். சாகித்ய அகாதமி விருதாளர் சா.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, என்னை கவர்ந்த புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து சிறுவர் தொடர்பான எழுத்தாளர்களான பேராசிரியர் மோகனா, யூமா.வாசுகி, சுட்டிகணேசன், சுஜாதா, லதாஆனந்த் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். தொழில் அதிபர்கள் வி.பாலு வாழ்த்திப் பேச, ஆர்.லட்சுமிநாராயணன் வரவேற்க, தணிக்கையாளர் என்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
 இன்றுடன் நிறைவு...
 புதன்கிழமை நிறைவுபெறும் புத்தகத் திருவிழாவில், காலை 10 மணிக்கு சிறப்பு விவாத அரங்கமும், மதியம் 2 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com