அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் போராட்டம் தாற்காலிக வாபஸ்

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததைக் கண்டித்தும், மாதந்தோறும் கடைசி வேலைநாளன்று ஊதியம் வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் கடந்த 5-ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம்,  பேரணி, மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக கருப்புப் பட்டை அணிந்து கருப்பு தினமாக கடைப்பிடித்தனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் செப்டம்பர் மாத ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் போராட்டக் குழுவினரை அழைத்து தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்ததுடன், மற்ற பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உயர் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக துணைவேந்தருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன், சிண்டிகேட் உறுப்பினர்கள் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, எம்.உமாமகேஸ்வரன், பேராசிரியர் வி.திருவள்ளுவன், முனைவர்கள் சிவகுருநாதன், உதயசந்திரன், சுப்பிரமணியன், இமயவரம்பன், பாஸ்கர், தனசேகர், முத்துவேலாயுதம், செல்வக்குமார், தவச்செல்வன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பேச்சுவார்த்தையில் பதிவாளர் கே.ஆறுமுகம் பங்கேற்றார்.
தொடர்ந்து, பூமா கோயில் முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் கூறியதாவது:
செப்டம்பர் மாத ஊதியம் வேறு துறையிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கோரினோம். தற்போது போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். உயர் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோரிக்கைகள் தொடர்பான தீர்வுகளுக்கு எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் அளிக்காவிட்டால் அக்.23-ஆம் தேதி முதல்  காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றார் எஸ்.மனோகரன்.
மேலும் வருகிற அக்.16-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்த ஆயத்தக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com