பயிர்க் காப்பீடு தொகை: ஏமாற்றத்தில் விவசாயிகள்

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சீரற்ற பருவ நிலையால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகள் உரிய தொகை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சாகுபடி பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிர்க் கடன் அளவே மகசூல் இழப்பு தொகையாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை கூடுதலாக உள்ளதால் நிவாரணத் தொகையும்  கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. சென்னை நீங்கலாக தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களில் கடந்த காலங்களில் தேசிய பயிர்க் காப்பீட்டு நிறுவனம் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த  பயிர்க் காப்பீட்டு திட்டம், புதிய வழிகாட்டுதலின்படி தனியார் நிறுவனங்களை உள்ளடக்கி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், ராமநாதபுரம், திருவாரூர், நாமக்கல், திருச்சி, மதுரை,  கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை வேளாண் காப்பீட்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் இரு ஆண்டுகளுக்கும், மற்றொரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஓர் ஆண்டுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளன. புதுக்கோட்டை, நாகப்
பட்டினம், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களை மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தம் செய்துள்ள 4 நிறுவனங்களில் வேளாண் காப்பீட்டு நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாகும். ஆனால், இரு தனியார் காப்பீட்டு நிறு
வனங்கள், மத்திய அரசின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்காது என்பதை முன்கூட்டியே எச்சரித்தும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் அந்த 3 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் 20 மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கிடைக்காத நிலை நீடிக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், தான் சேவை செய்யும் 11 மாவட்டங்களில் நெல் பயிருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.882 கோடி அறிவித்து அந்தந்த மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை முடித்து மற்ற பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய திட்டத்தில் உள்ள வழிகாட்டுதலின்படி அரசு அறிவிப்பு செய்த தினத்திலிருந்து 90 நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இது வரை முழுமையாக வழங்காதது ஏமாற்றமளிக்கிறது.
2016-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பருவ மழை குறைந்ததாலும், டெல்டா பாசனப் பகுதிகளில் காவிரி நீர் கிடைக்காததாலும், வறட்சியாலும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பலர் மன உளைச்சலில் மாரடைப்பாலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்தனர். இந்த நிலையில், பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்காமல் விரக்தியில் உள்ளார்கள்.
கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அட்சரேகை, தீர்க்க ரேகை அளவீடுகளுடன் துல்லியமாக படம் பிடித்து, தேசிய செய்தி பரிமாற்று மையத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூலம் மத்திய அரசுக்கு  வறட்சி குறித்த தகவலை தெரிவித்து, அதனடிப்படையில் வறட்சி நிவாரணமாக 1,800 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தும் விவசாயிகளுக்கு இழப்பீடு சென்றடைய வில்லை.
வறட்சி தொடர்பான கணக்கெடுப்புப் பணியை பாரபட்சமின்றி செய்திருந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணமும், பயிர் மகசூல் இழப்பீட்டுத் தொகையும் முழுமையாக கிடைக்கச் செய்திருக்க முடியும். கடலூர் மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை அடிப்படையில் மகசூல் அறுவடை பரிசோதனையில் விளைச்சல் நன்றாக உள்ளது என்ற புள்ளியியல் துறையின் அறிக்கையால்  இழப்பீடு இல்லை என விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 914 ஏக்கர் விளைநிலங்களுக்கு 71 ஆயிரத்து 241 விவசாயிகள் ரூ.5 கோடியே 79 லட்சம் பிரீமியம் செலுத்தி  இணைந்துள்ளார்கள். இதனால் ரூ.383 கோடி ரூபாக்கு இழப்பீடு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே 60 ஆயிரம் பேர். அதில் 42 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்ற நிலையில், 23 ஆயிரம் விவசாயிகளுக்கு தற்போது 83 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், எஞ்சியவர்களுக்கு 10 தினங்களில் வழங்கப்படும் எனவும் தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிராம வாரியாக வழங்கப்பட்ட இழப்பீட்டின் சதவிகித விவரம் இல்லை. ஒரே கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் சில விவசாயிகளுக்கு முழு தொகையும் சில விவசாயிகளுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறாத பெரிய விவசாயிகள் பிரீமியம் செலுத்திய முழு நிலத்தின் பரப்பளவுக்கும் இழப்பீடு கிடைக்காமல், குறைந்த அளவிலான பரப்பளவுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  
இது போன்ற குறைகளை கண்டறிந்து குறைவாக இழப்பீடு பெற்ற விவசாயிகளுக்கும் முழு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் பயிருக்கு மட்டுமே இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காத தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே  தமிழக விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com