தென்பெண்ணையாற்றில் உயர்மட்ட தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணையாற்றில் தரைமட்ட தடுப்பணை கட்டும் பணியை மறு ஆய்வு செய்து, உயர்மட்ட தடுப்பணை கட்ட

எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தென்பெண்ணையாற்றில் தரைமட்ட தடுப்பணை கட்டும் பணியை மறு ஆய்வு செய்து, உயர்மட்ட தடுப்பணை கட்ட அரசுக்கு பரிந்துரை அனுப்புமாறு மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி கடலூரில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் செல்லும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே உயர்மட்ட தடுப்பணை கட்டி, வாலாஜா வாய்க்காலில் தண்ணீரை திருப்பிவிட்டு நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பு சார்பில் வேலூர் மாவட்ட பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி வேலூர் மாவட்ட பொதுப்பணித் துறை சார்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், தென்பெண்ணையாற்றில் மணல்  அள்ளப்பட்டுவிட்டதால் உளுத்தாம்பட்டு - தளவானூர் இடையே தடுப்பணை அமைக்க முடியாது என்றும்,  எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தரைமட்ட தடுப்பணை அமைத்து, வாலாஜா வாய்க்காலுக்கு  தண்ணீர்விட முடியும் என்றும், இதற்காக பொதுப்பணித் துறை விழுப்புரம்  உள்கோட்டம் மூலமாக  திட்டம்,   வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஏற்புடையதல்ல.
எனதிரிமங்கலம் - தளவானூர் இடையே தரைமட்ட தடுப்பணை கட்டினால் அரசுப்  பணம் விரையமாவதோடு விவசாயிகளுக்கும் பயன்படாது. ஆற்றில் மணல் முழுவதும் அள்ளப்பட்டு ஆற்றின் மட்டம்  தாழ்வாக உள்ளதால், தரைமட்ட தடுப்பணை கட்டினால் தண்ணீர் கடலில்தான் கலக்கும். எனவே, வாலாஜா வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் அளவுக்கு உயர்மட்ட தடுப்பணை கட்டினால் மட்டுமே  பயன்கிடைக்கும். எனவே,  இந்தப் பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு ஆய்வு செய்து, உயர்மட்ட தடுப்பணை  கட்ட  அரசுக்கு பரிந்துரை அனுப்புமாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com