நிதிச் சிக்கலில் இருந்து அண்ணாமலைப் பல்கலை. மீட்கப்படுமா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை (அக்.23) முதல் காலவரையற்ற
நிதிச் சிக்கலில் இருந்து அண்ணாமலைப் பல்கலை. மீட்கப்படுமா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை (அக்.23) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் இருந்து தமிழக அரசால் மீட்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 88 ஆண்டுகளைக் கடந்து தற்போது சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் 10 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. மேலும் 1979-ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வி சேவையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 12,500 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி, முறைகேடுகள் காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக தமிழக அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து,   பல்கலைக்கழக நிர்வாகியாக ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவை  2013-ஆம் ஆண்டு நியமித்தது. தமிழக சட்டப் பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர 1928(1) என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, 2013-ஆம் ஆண்டில் புதிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஷிவ்தாஸ் மீனாவால் பல்வேறு கல்வி, நிதி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2015-ஆம் ஆண்டு முதல் இந்தப் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் செ.மணியன் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.  

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய இதர பணப் பயன்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை.

எனவே, தமிழக அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து 4,722 ஊழியர்கள், ஆசிரியர்களை மாநிலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்ய முடிவு செய்தது.

இதன்படி 2,643 பேர் பணி நிரவல் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பொறுப்பேற்றபோது ரூ.50 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, தற்போது ரூ.1,500 கோடியாக உயர்ந்துள்ளதால் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், மாதந்தோறும் கடைசி வேளை நாளன்று ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

பணி நிரவலை குறித்த காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  கடந்த அக்.5-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் அக்.13-இல் வழங்கப்பட்டது. இருப்பினும், கோரிக்கைகளுக்கு  நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் அக்.23-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அக்.19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அக்.30-ஆம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை (அக்.23) பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தீர்வுகள்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க சுமார் ரூ.ஆயிரம் கோடி நிதி தேவை. எனவே, பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்லிணக்கத்துடன் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை சந்தித்து, இந்தப் பல்கலைக்கழகத்தை மத்திய அரசு பல்கலைக்கழகமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். அல்லது சிறப்பு நிதி பெறலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் மிகப் பெரிய நிறுவனமாக என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் நிதி பெற்று பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  

பாரம்பரியமிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிதிச் சிக்கலில் இருந்து தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com