மானாவாரி விவசாய இயக்கத்தை சிறப்பாக நடத்த ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் மானாவாரி விவசாய இயக்கத்தைச் சிறப்பாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வேண்டுகோள் விடுத்தார்.

கடலூர் மாவட்டத்தில் மானாவாரி விவசாய இயக்கத்தைச் சிறப்பாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு மானாவாரி விவசாயிகளின் மேம்பாட்டுக்காக 'நீடித்த மானாவாரி விவசாயத்துக்கான இயக்கம்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 10 மானாவாரி தொகுப்புகளில் 30 மானாவாரி விவசாயக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 25,510 ஏக்கர் மானாவாரி நிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த மானாவாரி விவசாயக் குழுக்கள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும்.
இந்தத் திட்டத்தில் உழவு மானியமாக தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. நுழைவுப் பணிக்காக தொகுப்புக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
இதனைக் கொண்டு விவசாயிகள் கிராமத்துக்கு தேவையான தடுப்பணை, கசிவு நீர் குட்டைகள் அமைத்தல் பணிகளை பரிந்துரை செய்யலாம். மானாவாரி சாகுபடிக்காக 50 சதவீத மானிய விலையில் விதைகள், உயிர் உரங்கள், நுண்சத்து உரங்கள் வழங்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்புக்காக தொகுப்புக்கு ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
விளை பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்திட சிறுதானியங்கள் பதனிடும் இயந்திரம், பருப்பு உடைப்பு, தரம் பிரிப்பு, எண்ணெய் பிழிதல், சிப்பமிடுதல் ஆகிய இயந்திரங்கள் வாங்கிட, தொகுப்புக்கான கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.4 லட்சமும், விவசாய குழுக்களுக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.
மேலும், கால்நடை பராமரிப்புக்குத் தேவையான தாது உப்புகள், இனப்பெருக்க குறைபாடு நிவர்த்தி உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் தங்களது குழுக் கூட்டங்களில் விவாதித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com