விவசாயிகள் மண்வள அட்டையை பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

உரச் செலவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மண்வள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக் கொண்டார்.

உரச் செலவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மண்வள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மண் வளமே விவசாயிகளின் நலம் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை செய்து, மண் வளத்தைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. மண்வளம் என்பது பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்கள், நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இவைஅனைத்தும் சரியான அளவில் இருந்தால் மட்டுமே மண் ஜீவன் உள்ளதாகக் கருதப்படும்.
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தீவிர பயிர் சாகுபடியில் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டு, மண் உயிரற்றதாகிறது.
மண் மாசுபடுதல், மாறி வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 1980-ஆம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து, 2013-14 -ஆம் ஆண்டில் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.
எனவே, விளை நிலங்களின் மண்வள நிலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதாலும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதாலும் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும், பாதுகாக்கவும் முடியும்.
இதனைக் கருத்தில்கொண்டே ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளின் விளை நிலங்களின் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்களின் பயிர் சாகுபடித் திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருள்கள், ஊட்டச் சத்துக்களை இடவும், திட்டப் பயன்கள் குறித்து அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது.
மண்வள அட்டையானது, விவசாயிகள் தங்களது மண்ணுக்கேற்ற பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்யவும், பயிருக்கேற்ற பேரூட்ட, நுண்ணூட்ட உரங்களை இடவும் உதவுகிறது.
ரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு, தழை உரம், பசுந்தாளுரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கவும் மண்வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது.
எனவே, விவசாயிகள் மண்வள அட்டையைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com