விழுப்புரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை 

கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 13-ஆம் தேதி சார்-பதிவாளர்கள் உள்ளிட்ட பதிவுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மாவட்ட பத்திரப் பதிவு அலுவலர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் குமரேசன் அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றதாக ஊழல் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 அதன்பேரில், அங்கு சென்று சோதனையிட்ட போலீஸார் குமரேசன் அலுவலகத்தில் இருந்து ரூ. 92,630 கைப்பற்றினர்.
 குமரேசனின் வீடு கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் இருப்பதை அறிந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அங்கு சென்றனர். ஆனால், அவரது வீடு பூட்டியிருந்ததுடன் அவர் வெளியூர் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் 10 பேர் இரண்டு கார்களில் குமரேசனின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அவரது உறவினர்கள் வீட்டைத் திறந்துவிட, போலீஸார் உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
 கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் குமரேசன் அந்த வீட்டை ரூ. ஒரு கோடிக்கு வாங்கி, ரூ. 25 லட்சம் செலவு செய்து புதுப்பித்தது தெரிய வந்தது.
 மேலும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவைவிட வீட்டின் அளவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து, வீட்டை அளவீடு செய்தனர். காலை 8 மணியளவில் தொடங்கிய சோதனை பிற்பகல் ஒரு மணி வரை நீடித்ததது. சோதனையின் போது, முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், குமரேசனின் வீட்டில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரை, நள்ளிரவில் மர்ம நபர் அங்கிருந்து ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த காரில் ஆவணங்கள், பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com