கந்து வட்டிக் கொடுமை: ஆட்சியரகத்தில் விஷம் குடித்த தொழிலாளி 

கந்து வட்டிக் கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயி, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கந்து வட்டிக் கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயி, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 சிதம்பரம் வட்டம், சி.முட்லூர் அருகே உள்ள அம்பூட்டியபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி கோ.கிருஷ்ணன் (64). இவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். மனுவைப் பதிவு செய்த அவர், திடீரென தான் எடுத்து வந்திருந்த பூச்சி மருந்தை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் குடிக்கத் தொடங்கினார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார் (படம்).
 இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரிடம் கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், தனது மகளின் திருமணத்துக்காக 2012-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்தவரிடம் ரூ.1.20 லட்சம் கடன் பெற்றதாகவும், இதில், ரூ.85 ஆயிரத்தை திருப்பிச் செலுத்திய நிலையில், கடன் கொடுத்த நபர் தன்னை மிரட்டி தனது சொத்தின் மீது ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அடமானம் கடன் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர், அந்தச் சொத்தினை மற்றொருவர் பெயருக்கு கிரையம் செய்துவிட்டார்களாம். இதை தட்டிக் கேட்டபோது அடியாள்களை வைத்து தன்னை மிரட்டி வருவதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறுகையில், இந்தப் பிரச்னை தொடர்பாக கிள்ளை காவல்நிலையம், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னை மிரட்டி எழுதி வாங்கிய அடமானக் கடன் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com