"லோக் ஆயுக்த சட்டத்தில் பணி நியமனத்தையும் கொண்டு வர வேண்டும்'

லோக் ஆயுக்த சட்டத்தில் பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

லோக் ஆயுக்த சட்டத்தில் பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
 இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசு கொண்டுவந்துள்ள லோக் ஆயுக்த சட்டத்தை வரவேற்கிறோம். இந்தச் சட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், அரசுப் பணியாளர்கள் அனைவரும் வருகின்றனர்.
 ஆனால், பணியிட மாறுதல், பணி நியமனம், பதவி உயர்வு போன்றவை இந்தச் சட்டத்தில் வராது எனக் கூறப்பட்டுள்ளது. ஊழல் தொடங்குவதே இதில்தான். எனவே பணியிட மாறுதல், பணி நியமனம், பதவி உயர்வை இந்தச் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். பணியிட மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதலுக்கு ஏற்கெனவே அரசாணை, நிபந்தனைகள் உள்ளபோதும் அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் பணிமாறுதல் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படுவதில்லை. எனவே, இடமாறுதல், பணி நியமனம் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து லோக் ஆயுக்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்த அமைப்பு அரசியல்வாதிகள் சார்ந்ததாக அல்லாமல், நீதித் துறை சார்ந்ததாக இருத்தல் வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால், இதுகுறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜூலை 15-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க மாநில செயற் குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
 அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் கோ.சீனுவாசன், மாநிலச் செயலர் கோ.ஜெயச்சந்திரராஜா, முன்னாள் மாவட்டச் செயலர் மு.ராஜாமணி, நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் துரை.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com