கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நா.துரை (எ) உத்திரவேல் (42). இவர், கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்தம் எடுத்த வேலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து பணியைப் பெற்று செய்து வந்தாராம்.
 இந்த நிலையில், கடலூர் நகராட்சியின் ஆணையராக க.சரவணன் பொறுப்பேற்றதிலிருந்து சிக்கன நடவடிக்கை, முறைகேடாகப் பெறப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
 அதன்படி, முறையாக ஒப்பந்தம் பெறாத 2 துப்புரவு ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் ரத்து செய்தார்.
 இதனால், பாதிக்கப்பட்ட துரைக்கு கடந்த 6 மாதங்களாகச் செய்த பணிக்கு ரூ. 30 லட்சம் வரை நகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டுமாம். ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தாததால், புதன்கிழமை துரை தனது மனைவி ரேவதியுடன் கடலூர் நகராட்சி அலுவலகம் வந்தார்.
 அங்கு, ஆணையர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடிக்க முயன்றார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அதைத் தட்டிவிட்டும், சிறிதளவு விஷம் அவரது வாய்க்குள் சென்றது. இதையடுத்து, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து கடலூர் நகராட்சியினர் கூறியதாவது: முறையாக ஒப்பந்தம் பெறாமல் ஏன் பணிகள் வழங்கப்பட்டதெனவும், அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் தற்போது தணிக்கைத் துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஒப்பந்தப் பணிகளுக்குப் பணம் வழங்கவில்லை. ஒப்பந்தம் பெற்றவர் இதுதொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அவரிடமிருந்து பணியைப் பெற்றவருக்கு எவ்வாறு பணம் வழங்க முடியும் என்றனர்.
 இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com