சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
 மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு 2017-ஆம் ஆண்டு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல் முடிவுகளை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி அறிவித்திருந்தார்.
 இந்த நிலையில், புதிதாக விண்ணப்பங்களை வரவேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் காலியாக உள்ள 108 சத்துணவு அமைப்பாளர், 145 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். காலிப் பணியிடங்களுக்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ.க்குள் இருக்க வேண்டும்.
 சத்துணவு அமைப்பாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பிப்போர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பினரெனில் 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 40 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும். பொதுப் பிரிவில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவரெனில் 20 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும்.
 சமையல் உதவியாளர் பணியிடத்துக்கு பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் விண்ணப்பிப்போர் 5-ஆம் வகுப்பு படித்திருப்பதோடு, 21 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். பழங்குடியினரெனில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும்.
 பொதுப் பிரிவில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவரெனில் 20 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 காலிப் பணியிடங்கள், இனசுழற்சி முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட மைய விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தெரிந்துகொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் அத்தாட்சி செய்யப்பட்ட நகலையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com