நகராட்சி முன்னாள் ஆணையர் தாக்கப்பட்ட விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் ஆட்சியரிடம் மனு

கடலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் காளிமுத்து தாக்கப்பட்ட விவகாரம் மீண்டும் எழுந்துள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் நிஷாகந்தன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கடலூர் நகராட்சி முன்னாள் ஆணையர் காளிமுத்து தாக்கப்பட்ட விவகாரம் மீண்டும் எழுந்துள்ளதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் நிஷாகந்தன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
 கடலூர் நகராட்சியின் இளநிலை பொறியாளராக இருப்பவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இவர், கடந்த 8-ஆம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது இவருக்கும் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், அதிமுக பிரமுகருமான வ.கந்தனுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதோடு, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 இதில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வ.கந்தன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்த விவகாரத்தில், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், தன்னை கந்தன் தாக்கியபோது ஏற்கெனவே இருந்த நகராட்சி ஆணையர் காளிமுத்துவை தான் தான் தாக்கியதாகவும், அதேபோல உன்னையும் தாக்குவேன் என்று கந்தன் கூறியதாக வாக்குமூலம் அளித்தார். அதாவது 2014-ஆம் ஆண்டில் கடலூர் நகராட்சி ஆணையராக இருந்தவர் காளிமுத்து. இவர் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபயிற்சி மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர், கடலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
 இதற்கிடையில் அப்போதைய நகர்மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சி.கே.சுப்ரமணியம் இருந்தார். ஆணையர் தாக்கப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஆர்.குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து சி.கே.சுப்ரமணியன் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தற்போது, நகராட்சி பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவர் அளித்த பேட்டியின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தார். அதில், ஆணையர் காளிமுத்து தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் கந்தன் வாக்குமூலம் அளித்து அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 முன்னதாக இந்த பிரச்னை தொடர்பாக கந்தனின் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான நிஷாகந்தன் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து முறையிட்டார். அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆட்சியரை சந்தித்தார்.
 அப்போது அவர் அளித்த மனு: எனது கணவர் கந்தன் மீது ஏற்கெனவே முன்விரோதத்தில் இருந்து வந்த இளநிலை பொறியாளர் திட்டமிட்டே சில புகார்களை தெரிவித்துள்ளார்.
 அவரால் தாக்குதலுக்கு உள்ளான எனது கணவர் கொடுத்த புகார் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலும், முன்னாள் ஆணையர் காளிமுத்து தாக்கப்பட்ட புகாரில் வேண்டுமென்றே எனது கணவரின் பெயரை சேர்த்து பேட்டியளித்து வரும் இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com