விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது: குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகளின் ஒப்புதலின்றி  நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகளின் ஒப்புதலின்றி  நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, வேளாண்மைத் துறை எம்.டி.கிருபாகரன்,  கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, மின்வாரிய செயற்பொறியாளர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன்: கடலூர் அருகே மலைக் கிராமங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சாலைப் பணிக்காக நிலங்களைக் கையகப்படுத்தும் முன்னர் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.21 லட்சம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி தொகையை தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன்: கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் கதவணை அமைக்கும் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. எனவே இந்தத் திட்டத்தில், கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் உரிய தண்ணீர் கிடைக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை மாற்றியமைக்க வேண்டும். ரூ.140 கோடியில் நடைபெறும் வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை ஆக்கிரமிப்பு அகற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு  விவசாயிகளின் ஒப்புதலின்றி  நிலம் கையகப்படுத்தப்படுவது கண்டனத்துக்குரியது. 
நெய்வேலி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரானது, 800 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரியை வெட்டி சேகரிக்கப்படுவதை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
கார்மாங்குடி எஸ் வெங்கடேசன்: கடலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும், இந்த மாவட்ட விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. மின்வாரியத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்று, பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்றி மின்சாரம் வழங்க வேண்டும். வெலிங்டன் ஏரி வாய்க்கால்களில் ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளில்  தரமில்லை. 
பேரூர் காமராஜ்: பெலாந்துறை அணைக்கட்டிலிருந்து காணூர் பெரிய ஏரிக்குச் செல்லும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும. குண்டபண்டிதன் ஓடை, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 
வடமூர் ரெங்கநாயகி: தூர்ந்து கிடக்கும் ராதா வாய்க்காலை மீட்டு புனரமைக்க வேண்டும். 
புதுக்கூரப்பேட்டை 
கலியபெருமாள்: விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு தடையில்லாச் சான்று வழங்க ரூ.10 ஆயிரம் வரை லஞ்சமாகக் கேட்கப்படுகிறது. 
காவாலக்குடி சி.முருகானந்தம்: ஸ்ரீமுஷ்ணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு பயிர்க் கடன் பெற்றவர்களுக்கு இதுவரை உரம் வழங்கப்படவில்லை. 
நல்லூர் ஜெகதீஸ்வரன்: தனியார் சிமென்ட் ஆலைகளால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடி அளவுக்கு சரிந்துவிட்டது. பெலாந்துறை அணைக்கட்டும் வறண்டுள்ளது.
கொட்டாரம் மகராஜன்: வெலிங்டன் ஏரி வெட்டப்பட்டு 95 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை. கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியை தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அண்ணாகிராமம் காந்தி: விழுப்புரம் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே செல்லும் மலட்டாறை சீரமைக்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.24 கோடியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். 
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். 
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேசியதாவது: 
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது சம்பந்தப்பட்டத் துறையினர் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். ஏரியில் வண்டல் மண் அள்ளுவதில் விவசாயிகள் கண்காணிப்புக் குழு அமைத்துச் செயல்பட வேண்டும்.  
தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரங்கமங்கலம், பள்ளிப்பட்டு, வேங்கடம்பேட்டை, கண்டரக்கோட்டை, தையல்குணம்பட்டினம், முள்ளிகிராம்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், டி.பாக்கம், பெத்தநாயக்கன்குப்பம், வசந்தராயன்பாளையம் ஏரிகளில் 1.50 லட்சம் கன மீட்டர் அளவில் மண் எடுக்கப்படுகிறது என்றார் ஆட்சியர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com