கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், கடலூர் பாடலி சிட்டி அரிமா சங்கம், ஜேசிஐ, கடலூர் விடியல் ஆகியவை இணைந்து உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வுப் பேரணியை கடலூரில் புதன்கிழமை நடத்தின. கடலூர் நகர அரங்கு எதிரே இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
 பேரணி பாரதி சாலை வழியாகச் சென்று அரசுத் தலைமை மருத்துவமனை சென்றடைந்தது. இந்தப் பேரணியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
 இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: இந்தியாவில் கண் நீர் அழுத்த நோயால் 112 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 8 -இல் ஒருவருக்கு கண் நீர் அழுத்த நோய் உள்ளது. கடந்த 10 மாதங்களில் 223 நபர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண் நீர் அழுத்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 22 நபர்களுக்கு கண் நீர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு மருந்துகள் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் நீர் அழுத்த அறுவைச் சிகிச்சை, லேசர் சிகிச்சை ஆகியவை முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாகச் செய்யப்படுகிறது.
 வலியுடன் கூடிய சிவந்த கண்கள், வானவில் போன்ற வண்ண வளையங்கள், மங்கலான கண் பார்வை, குறுகிய மையப் பார்வை, இரவில் பார்வைத் தடுமாற்றம். கண்ணாடி பவர் அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பது என்பவை இதன் அறிகுறிகளாகும்.
 எனவே, கண் நீர் அழுத்த நோய் உள்ளதா என்பதை அறிந்திடவும், அதற்குரிய சிகிச்சைப் பெற்றிடவும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் அணுகலாம் என்றார் அவர்.
 பேரணியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவாஹர்லால், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹபிசா, மாவட்ட முதன்மை கண் மருத்துவர் அசோக் பாஸ்கர், இந்திய மருத்துவக் கழகத் தலைவர், உறுப்பினர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com