கோயில்களில் பங்குனி உத்திர கொடியேற்று விழா

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில், நெய்வேலி வேலுடையான் பட்டு கோயிலில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில், நெய்வேலி வேலுடையான் பட்டு கோயிலில் புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.
நடுநாட்டு திருத்தலங்களில் பாடல் பெற்ற தலமாக திட்டக்குடியில்  அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திர விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதனை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான யாகசாலையில் சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் உற்சவர்கள் கொடிகம்பம் முன் மலர்களால் அலங்கரித்து வீற்றிருந்தனர். 
புனிதநீர் கலசங்கள் கோயிலைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு கொடிக்கம்பம் முன் வைக்கப்பட்டு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர்,  பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டு நாடு நலம் பெறவும், இளைஞர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறவும், சுமங்கலிகள் நல்வாழ்வு பெறவும் வேண்டி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் விழாவிற்கான கொடியேற்றப்பட்டது. அப்போது, பக்தர்கள் நமச்சிவாய, நமச்சிவாய என கோஷமிட்டனர். 
பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 
11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் வரும் 27-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மனுக்கும் சிவனுக்கும் திருக்கல்யாண விழா, 29-ஆம் தேதி வியாழக்கிழமை காலை திருத்தேர் விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் பழனியம்மாள், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர். நெய்வேலி: நெய்வேலி குழுக்கோயில்களில் புகழ்பெற்ற கோயிலாக வேலுடையான்பட்டு கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். கோயில் குருக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடி மரத்தில் கொடியேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி இந்தியா நிறுவன இயக்குநர்கள் ஆர்.விக்ரமன், பி.செல்வகுமார் மற்றும் அதிகாரிகள், கோயில் நிர்வாக அறங்காவலர்கள், என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க செயலர் ராம.உதயகுமார், குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட  முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com