கூட்டுறவுச் சங்கங்களை இயக்க செயலாட்சியர்களை நியமிக்க வலியுறுத்தல் 

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் காரணமாக முடங்கியுள்ள சங்கங்களுக்கு செயலாட்சியர்களை நியமிக்க வேண்டும் என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் காரணமாக முடங்கியுள்ள சங்கங்களுக்கு செயலாட்சியர்களை நியமிக்க வேண்டும் என மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
 தமிழகத்தில் கடந்த மே 8-ஆம் தேதியுடன் கூட்டுறவு சங்க தலைவர்களின் பணிக் காலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டன. முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் மே 9-ஆம் தேதி பொறுப்பேற்றனர்.
 இதர தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தடை உத்தரவால் அறிவிக்கப்படவில்லை. இதனால் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை.
 இந்த நிலையில், மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் சாம்பசிவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயாவிடம் அளித்த மனு: தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் இல்லாத நிலையில், கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து இயங்குவதற்காக அந்தச் சங்கங்களுக்கு செயலாட்சியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அந்தச் சங்கங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும். ஆனால், செயலாட்சியர்கள் நியமிக்கப்படாததால் பெரும்பாலான கூட்டுறவு சங்க நிர்வாகங்கள் முடங்கியுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 கடலூர் மாவட்டத்தில் உள்ள 168 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 31 சங்கங்களுக்கு மட்டுமே நிர்வாகிகள் உள்ள நிலையில், மீதமுள்ள 137 சங்கங்களின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கியுள்ளன.
 இவற்றின் மூலம் செயல்படும் 1,200 நியாயவிலைக் கடைகளும் நிலை தடுமாறி இயங்கி வருகின்றன. கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் 2 ஆயிரம் பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாததோடு, பயிர்க் கடன், மத்திய காலக் கடன் உள்ளிட்ட கடன்களையும் விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு தேவையான உரங்களை விநியோகிக்க முடியவில்லை. எனவே, பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக செயலாட்சியர்களை நியமிக்க வேண்டும்.
 இதில், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், வருகிற 21-ஆம் தேதி முதல் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்களும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல உள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com