கஜா புயல்: நெருக்கடி நிலையால் மக்கள் தவிப்பு

கஜா புயலால் திடீர் நெருக்கடி நிலைக்கு கடலூர் நகரம் தள்ளப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கஜா புயலால் திடீர் நெருக்கடி நிலைக்கு கடலூர் நகரம் தள்ளப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
 வங்கக் கடலில் உருவான கஜா புயல் வியாழக்கிழமை (நவ.15) மாலை கரையைக் கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பால் திடீர் நெருக்கடி நிலைக்கு கடலூர் நகர மக்கள் தள்ளப்பட்டனர். குறிப்பாக, கஜா புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடலூரில் காலை 10 மணிக்கு மிதமான அளவில் பெய்த மழை, அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் சிறிது நேரம் பெய்தது. பின்னர் மாலை 4 மணிக்கு மழை பெய்தது. மற்ற நேரங்களில் வெயில் அடித்ததோடு, திடீரென மேக மூட்டமாகவும் காணப்பட்டது. இவ்வாறு மழை விட்டு, விட்டு சிறிது நேரம் மட்டுமே பெய்து வந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அறிவிப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன.
 அதாவது, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை அந்தந்த நிறுவனங்கள் மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்தது. இதன்படி, கடலூர் நகரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் மாலையில் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தன. அதே நேரத்தில், புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து சேவை நிறுத்தம் செய்யப்படுவதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து சிறிது நேரத்தில் கடலூர் - புதுச்சேரி வழித்தட போக்குவரத்தில் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், கடலூரிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளும், ஒருசில அரசுப் பேருந்துகளும் சேவையை நிறுத்திக் கொண்டன. இதனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து தவித்தனர்.
 ஏற்கெனவே, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், மாலையில் தனியார் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதாலும் சாலைகள் வெறிச்சோடின. பெரும்பாலான மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com