பண்ருட்டி பகுதியில் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருட்டு நகைகளை விற்று, ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டவரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருட்டு நகைகளை விற்று, ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தியது தெரியவந்தது.
பண்ருட்டி நகரில் கடந்த ஓராண்டாக பெண்கள், குழந்தைகளிடம் தொடர்ந்து நகைகள் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பண்ருட்டி காவல் ஆய்வாளர் ஏ.ஆரோக்கியராஜ் புதன்கிழமை மாலை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். 
அப்போது, அந்த வழியாக கையில் பையுடன் வந்த சந்தேகத்துக்குரிய நபரை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது, அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரை சோதனையிட்டதில் தங்க நகைகள் வைத்திருந்தது தெரிய வந்ததாம்.
இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, அரசப்பட்டு அஞ்சல், மேலத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணா (38) என்பது தெரியவந்தது. இவர் 25.12.2017 அன்று பண்ருட்டி காமராஜ் நகரில் தையல்நாயகி (57) என்பவரை ஏமாற்றி 3 பவுன் தங்க நகை திருடியதையும், 4.2.2018 அன்று கடலூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் குழந்தையிடம் மூன்றரை பவுன் தங்க நகை திருடியதையும், 6.2.2018 அன்று கடலூரிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில், விழுப்புரம் மாவட்டம், தொடர்ந்தனூரைச் சேர்ந்த சுபாஷினி என்பவரிடம் 5 பவுன் நகை திருடியதையும், 8.3.2018 அன்று பண்ருட்டி லட்சுமிபதி நகரில் அந்தோணிசாமி என்பவரிடம் 4 பவுன் நகை திருடியதையும் ஒப்புக்கொண்டாராம். மேலும், பண்ருட்டியில் பல்வேறு நூதன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து விக்னேஷ் கண்ணாவை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 
ஏழை மாணவர்களுக்கு உதவி: மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், திருட்டு நகைகளை விற்று படாளம், அச்சரப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் பள்ளியில் படிக்கும்  ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தியதும், ஏழைகள், உறவற்றவர்களுக்கு உணவு வழங்கியதும் தெரியவந்ததாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com