மாநிலத்தின் வளர்ச்சி முதல்வர் தலைமையில் ஆலோசனை

புதுவை மாநில வளர்ச்சி குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில வளர்ச்சி குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி, கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசு செயலர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுதில்லியில் நடைபெற உள்ள நிதி அயோக் கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் நிதி ஆதாரம், மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை இணைப்பது, கடன் ரத்து, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசவுள்ளோம். சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக புதுவை திகழ்கிறது.
கடந்த காலங்களில் 100 சதவீதம் மானியத்தை மத்திய அரசு புதுவைக்கு வழங்கியது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்படுவது போல மாற்றப்பட்டுள்ளது.
மாநில வருவாய் பாதிப்பு: கடந்த ஆண்டு ரூ. 6,625 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 95 சதவீதத்தைச் செலவு செய்துள்ளோம். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, மதுக் கடைகள் மூடல், வீட்டுமனைப் பதிவு நிறுத்தும் ஆகியவற்றால் புதுவைக்கு வரவேண்டிய வருமானம் பாதிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும், முழுமையாகத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தில்லிக்கு அடுத்தபடியாக 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை புதுவையில் அமல்படுத்தியுள்ளோம். இதனால் ரூ. 556 கோடி அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதியைப் பெற வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.
சுற்றுலா வளர்ச்சி, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி, முதியோர், விதவை மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி ஆகிய திட்டங்களை அரசின் மிக முக்கிய திட்டங்களாகக் கருதுகிறோம். இந்தத் திட்டங்களுக்கு எந்தத் தடை ஏற்பட்டாலும் அதைத் தகர்த்தெறிந்து நிறைவேற்றுவோம் என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com