தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஆக. 14-இல் கலந்தாய்வு

ஏற்கெனவே நடைபெற இருந்து ஒத்தி வைக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான

ஏற்கெனவே நடைபெற இருந்து ஒத்தி வைக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவப் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் என, சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுவையில் அகில இந்திய அடிப்படையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான (புதுவை மாணவர்கள் உள்பட) எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 21-ஆம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை ஒத்தி வைப்பதாக சென்டாக் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, காலை 11 மணிக்கு புதுச்சேரி சிறுபான்மை (கிறிஸ்துவர்) பிரிவினருக்கும், முற்பகல் 12 மணிக்கு புதுச்சேரி மொழியியல் சிறுபான்மை (தெலுங்கு) பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 
பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வில் 656 முதல் 497 வரையும், மாலை 3 மணிக்கு 496 முதல் 464 வரையும், மாலை 4 மணிக்கு 463 முதல் 438 வரையும் மதிப்பெண்கள் எடுத்த அகில இந்திய (புதுவை உள்பட) ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 381 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற என்ஆர்ஐ, பிஐஓ, ஓசிஐ பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 220, என்ஆர்ஐ - 65 என மொத்தம் 285 இடங்கள் உள்ளன. இதில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 12 லட்சமும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 20 லட்சமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் கிடைக்க பெறாத, அதேநேரம் உரிய மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களும் தங்களின் அசல், நகல் சான்றிதழ்களுடன், வரைவோலை ரூ. 750, (எஸ்சி, பிடி ரூ. 350) புதுவையில் செலுத்தத் தக்க வகையில் "தி கன்வீனர், சென்டாக்' என்ற பெயரில் கொண்டு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com