உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மத்திய அரசின் நிதியை எவ்வாறு பெற முடியும்? கிரண் பேடி கேள்வி

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மத்திய அரசின் நிதியை எவ்வாறு பெற முடியும் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மத்திய அரசின் நிதியை எவ்வாறு பெற முடியும் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கிராமங்களுக்கான உரிமை என்பது கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் வழங்கப்படுகிறது. குறைவான ஊழியர்கள், நிதி ஆதாரங்கள் இல்லாததால் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கிராமங்களைப் புறக்கணித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்குத் துணைபுரிய வேண்டும்.
இவ்வாறு செய்யாமல் மணல் கடத்தலைத் தடுப்பது, நீரைச் சேமிப்பது, திறன் மேம்பாடு, பள்ளிக் கல்வி மேம்பாடு, மரக்கன்றுகள் நடும் பணி, இளைஞர் மேம்பாடு போன்றவை எப்படி நடைபெறும்?
பஞ்சாயத்துத் தேர்தலை நடத்த முடியாமைக்கான தடைகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் புதுச்சேரி நலன் கருதி அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு செய்வதால், கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்துக்குக் குடி பெயர்வதைத் தடுத்து, விவசாயத்தைக் காக்க உதவும். கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும். 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்படும். அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்படும். நீராதாரங்களைத் தூய்மைப்படுத்தும் பணியும், அதன் பயன்களைப் பெறுவதும் மக்களின் கைகளில் இருக்க வேண்டும். இது விமர்சனம் அல்ல; புதுச்சேரி மாநிலத்தின் மீதுள்ள அக்கறை.
புதுச்சேரி மாநிலம் அனைத்து வகையிலும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க முடியும். கிராமப் பஞ்சாயத்து அமைப்பு இருந்தால்தான் மத்திய அரசிடம் இருந்து நிதியைச் சுலபமாகப் பெற முடியும். இல்லையென்றால் எவ்வாறு நிதியைப் பெற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com