கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு!

அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி அரசு. எனவே, நிதி நெருக்கடியைப் போக்க மத்திய அரசு கைகொடுக்க வேண்டும்
கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு!

அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி அரசு. எனவே, நிதி நெருக்கடியைப் போக்க மத்திய அரசு கைகொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 புதுச்சேரி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போதைய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி வெளிப்படையாகவே கூறினார்.
 புதுச்சேரி அரசுக்கு வரி வருவாய் மூலம் மாதம் ரூ.200 கோடி, மத்திய அரசின் நிதியாக ரூ.125 கோடி என 325 கோடி மொத்த வருவாயாகக் கிடைக்கிறது.
 இவற்றில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ.200 கோடி ஊதியம், ஓய்வூதியம் வழங்கியதுபோக , எஞ்சியுள்ள ரூ. 125 கோடியில் அரசு ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்காக மாதம் ரூ.50 கோடி வட்டி செலுத்த வேண்டும். மீதம் உள்ள ரூ.75 கோடியை வைத்து தான், நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியமும், மற்ற திட்டச் செலவுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொகை போதாததால் மாதந்தோறும் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வாங்கி அரசு செலவு செய்து வருகிறது.
 தொடக்கக் காலங்களில் புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் கணக்கில் இடம் பெற்றிருந்ததால் தனியாகக் கடன் ஏதும் வாங்க இயலவில்லை. இதனால், புதுச்சேரி மாநிலத்துக்கென கடந்த 17.12.2007-இல் தனிக் கணக்கு தொடங்கப்பட்டு, ரூ.350 கோடி கடன் வாங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் புதுச்சேரி அரசு கடன் வாங்கி செலவுகளை சமாளித்து வந்தது. தற்போது அரசின் கடன் சுமை ரூ.8 ஆயிரத்து 450 கோடியாக உள்ளது. இதற்கு மாதம் ரூ.50 கோடி வட்டி செலுத்தப்பட்டு வருகிறது.
 ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கி, வருகிற 17-ஆம் தேதியுடன் பத்து ஆண்டுகள் முடிகிறது. எனவே, அங்கு வாங்கிய ரூ.350 கோடியை டிச.17-க்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி நிலைக்கு புதுச்சேரி அரசு தள்ளப்பட்டுள்ளது.
 ஆனால், அரசின் மொத்த வருமானமே ரூ. 325 கோடி என்றிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கிக்கு ரூ.350 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதால் அடுத்த இரு மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிதி நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க ரூ.350 கோடி புதிதாகக் கடன் வாங்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
 துணை நிலை ஆளுநருடன் சுமுக உறவு இல்லாத நிலையில், இதற்கான ஒப்புதலை அவரிடம் பெற்று, மத்திய அரசு மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி கடன் பெற புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் மட்டுமே, அடுத்த மாதம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் எனத் தெரிகிறது.
 "மாநில அரசே பொறுப்பு'
 இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் கேட்டபோது, புதுச்சேரி அரசு அமைச்சரவையைக் கூட்டி மாநிலத்துக்கான நிதியை அதிகரித்து வழங்கும்படி மத்திய அரசிடம் கேட்டிருக்க வேண்டும். அரசு நிறுவனங்களை லாபகரமாக இயக்குவது மாநில அரசின் பொறுப்பு. அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்குவது தொடர்பாக நிதித் துறைச் செயலர் உரிய முடிவு எடுப்பார் என்றார்.
 "உரிய வகையில் தீர்வு'
 இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமியிடம் கேட்டபோது, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
 அரசுக்கு நிதி நெருக்கடி என்று கூறுவதை ஏற்கமாட்டேன். எனினும், இந்தப் பிரச்னைக்கு உரிய வகையில் தீர்வு காண்போம் என்றார்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com