புதுவையில் கள ஆய்வுக்குச் சென்றஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸார் திடீர் போராட்டம்

புதுச்சேரியில் சனிக்கிழமை கள ஆய்வுக்குச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் திடீரென முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சனிக்கிழமை கள ஆய்வுக்குச் சென்ற துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் திடீரென முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அரசு பரிந்துரை செய்யாமல் மத்திய அரசே நேரடியாக நியமித்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனால், கடும் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக கடந்த 5-ஆம் தேதி முதல் தொகுதி வாரியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஏகேடி ஆறுமுகம் தலைமையில் காந்தி நகரில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஊசுட்டேரி
பகுதிக்கு கள ஆய்வுக்குச் சென்றிருந்த ஆளுநர் கிரண் பேடி அந்த வழியாக சைக்கிளில் ஆளுநர் மாளிகை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காத கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் போராட்டம் குறித்து ஏகேடி ஆறுமுகம் கூறியதாவது: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து வருகிறார். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.
புதுச்சேரியில் இருந்து கிரண் பேடி வெளியேற வேண்டும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது.
எனவேதான், துணை நிலை ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் அவர்.
இதே போல, கடந்த 15 நாள்களுக்கு முன்பு, உழவர்கரை தொகுதியில் கள ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் கிரண் பேடியை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பாலன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆளுநர் பாதியிலேயே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com