ஜிஎஸ்டி வரி வசூல் புகார்: வணிகவரித் துறை அதிகாரிகள் ஆய்வு

புதுவையில் பல்வேறு கடைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து வணிகவரித் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

புதுவையில் பல்வேறு கடைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து வணிகவரித் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதில், பொருள்களுக்கு 5, 12, 18, 28 ஆகிய சதவீதங்களில் வரி வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதில் விற்பனையாளர்கள் 50 சதவீதம் மாநில அரசுக்கும், 50 சதவீதம் மத்திய அரசுக்கும் வசூலித்துத் தர வேண்டும்.
 மேலும், இந்த வரி பொருள் எந்த விலைக்கு விற்கப்படுகிறதோ அதில் இருந்தே போட வேண்டும். ஆனால், பல வியாபாரிகள் தான் விற்கும் விலையை தவிர்த்து, பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலையிலும், வரி போட்ட பின்வரும் கூட்டுத் தொகையிலும் வரியை விதித்து தவறான முறையில் வசூலித்து வருகின்றனர்.
 அந்த வகையில், புதுச்சேரியில் செல்லிடப்பேசி உதிரிப்பாகங்கள் விற்கும் கடையில் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய தொகைக்கு வரி வசூலித்து இருந்தனர்.
 இது குறித்து புதுச்சேரி வணிக வரித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வணிகவரித் துறை அதிகாரிகள் அந்த கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைக்காரர்கள் அதிகபட்ச விலையில் இருந்து குறைத்துத்தான் நாங்கள் பொருள்களை விற்பனை செய்கின்றோம், அவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விலையிலேயே வரியையும் பிடித்தம் செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
 இதையடுத்து, வணிக வரித்துறை அதிகாரிகள் அவ்வாறு வசூல் செய்வது தவறு, அதிலும் உங்களுக்குத்தான் இழப்பு ஏற்படும். மேலும், வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் வரியை அரசிடம் செலுத்துவீர்களா? என்ற சந்தேகமும் ஏற்படும்.
 எனவே, முறையாக என்ன விலைக்கு பொருள்களை விற்க முடிவு செய்கின்றீர்களோ, அந்த விலைக்கு வரியை வசூலியுங்கள், அதற்கு ஏற்றவாறு உங்கள் கணினியில் மென்பொருளை மாற்றம் செய்யுங்கள். அதுவரை கையில் ரசீது போடுங்கள் என்று வலியுறுத்தினர்.
 இது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகள் கூறியது:
 புதுச்சேரி வணிகவரித் துறை சரக்கு மற்றும் சேவை வரி குறித்து வணிகர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தாலும் இன்னும் புரிந்து கொள்ளாமலேயே உள்ளனர்.
 பலர் மொத்த விற்பனை விலையில் இருந்து வரியை வசூலித்து மக்களையும், அரசையும் ஏமாற்றுகின்றனர். அதுபோல் செய்தால் மக்கள் உடனடியாக எங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு வரும் புகார்களின் மீது உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதுபோல, மக்கள் பொருள்களை வாங்கும்போது விற்பனை ரசீதையும் வாங்க வேண்டும். அப்போதுதான் வரி எவ்வளவு வசூலிக்கின்றனர் என்பது தெரியவரும். வணிகர்களும் எவ்வாறு வரி வசூலிக்க வேண்டும் என்பது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகளிடம் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com