புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் எனக்கு இரட்டிப்புப் பொறுப்பு உள்ளது: ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநராகவும், நிர்வாகியாகவும் எனக்கு இரட்டிப்புப் பொறுப்பு உள்ளது என, ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநராகவும், நிர்வாகியாகவும் எனக்கு இரட்டிப்புப் பொறுப்பு உள்ளது என, ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், நான் எனது பணி விதிகளுக்கு உள்பட்டே செயல்பட்டு வருகிறேன்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம். இங்கு நான் துணைநிலை ஆளுநராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளேன்.
மாநில நிர்வாகம் தொடர்பான நிதிக்கான அனுமதி, கோப்புகள், பணி மாறுதல்கள், பணியாளர் நியமனங்கள், ஊழியர்களின் பணி விவகாரம், அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை என்னிடம் ஏன் வருகின்றன?
இதற்குக் காரணம் புதுவைக்கு முழு நேரமும் பணிபுரியக் கூடிய ஆளுநர் கிடைத்துள்ளார் என்பதே. மக்களின் குறைகளைக் கேட்டு, பல்வேறு இடங்களுக்கு கள ஆய்வுக்குச் சென்று, கோப்புகளைச் சரியாகப் பரிசீலித்து எங்கே தவறு, எங்கே குறை என ஆராய்ந்து, அவற்றைச் சரி செய்கிறேன்.
ஊழல், முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை விசாரணைக்காக மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். இவை அனைத்தும் எனது பொறுப்புகளுக்கு உள்பட்டே நடைபெறுகிறது.
புதுச்சேரியின் நலனுக்காக நான் எனது நேரத்தைச் செலவிடுகிறேன். இதன் மூலம் முன்னேற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் இங்கிருக்கும் வரை எனது பணி தொடரும். ஆளுநர் மாளிகை மக்களுக்காகவே செயல்படும்.
முறையான நிதி மேலாண்மையை உறுதி செய்வேன். அது எனது கடமை. எனது இந்தப் போக்கையும் நோக்கத்தையும் யாராவது தவறாக எடுத்துக் கொண்டால் அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.
என்னைப் பொருத்தவரை சேவை புரிவது ஒன்றே எனக்குத் தெரிந்த ஒரே வழிமுறை. இங்கிருக்கும் கடைசி நாள் வரை சேவை புரிவேன் என, தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com