அரசு மகளிர் கல்லூரியில் இலவச சிற்றுண்டி வசதி: அமைச்சர் கந்தசாமி தொடக்கிவைத்தார்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் மாணவிகளுக்கு

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
 பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 15 துறைகளில் மொத்தம் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
 புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிர்க்கணக்கான மாணவிகள் வந்து செல்கின்றனர். நலிந்த நிலையில் உள்ள ஏராளமான மாணவிகள் காலை நேரத்தில் சிற்றுண்டி உண்ணாமல் கல்லூரிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.
 இலவச சிற்றுண்டி திட்டம்: முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் பல்வேறு நல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, ஏழை மாணவிகளின் கல்விக் கட்டணத்தை சங்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சங்கத் தலைவர் ரசியா, செயலாளர் ரஜினி சனோலியன் மற்றும் உறுப்பினர்கள் நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், டாக்டர் ரீமன் தம்பதி ரூ. ஒரு லட்சம் நன்கொடை அளித்தனர்.
 அதேபோல, சங்க உறுப்பினர்களும் சேர்ந்து திரட்டிய ரூ.50 ஆயிரம் நிதியைக் கொண்டு சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு முதல்வர் ஆர்.பூங்காவனம் தலைமை வகித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
 கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் சிறப்பானது. இந்த முயற்சிக்கு பாராட்டுகள். அரசு அதிகாரிகள் தங்கள் துறைகளில் வரும் கோப்புகளை கூட சரிபார்த்து அனுப்புவதில் தாமதம் செய்யும் போக்கு உள்ளது.
 அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என பார்க்கின்றனர். மக்களுக்கான சேவையை எந்த பிரதிபலனும் பாராமல் செய்ய வேண்டும்.
 அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகள், வசதி படைத்தவர்கள் அரசு தரும் இலவசத் திட்டங்களை வேண்டாம் என மறுக்க வேண்டும்.
 அதனால் மீதமாகும் தொகை ஏழைகளுக்கு பல்வேறு வகைகளில் பயன்தரும். இதுதொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் கிராமங்களுக்குச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளேன்.
 இலவசங்களை வழங்காவிட்டால் தேர்தலில் தோல்வியடையும் நிலை தான் உள்ளது. நலிந்த பிரிவினர் மட்டுமே இலவசத் திட்டங்களால் பயன்பெறும் நிலை வர வேண்டும். கல்வி தான் ஒருவரை உயர்த்தும். நாம் இறந்தாலும் பெற்ற கல்வி எப்போதும் நிலைத்திருக்கும் என்றார் கந்தசாமி.
 எம்.எல்.ஏக்கள் க.லட்சுமி நாராயணன், வையாபுரி மணிகண்டன், அதிமுக தொகுதிச் செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
 சங்க நிர்வாகிகள் ரசியா, ரஜினி ஆகியோர் கூறியதாவது:
 அனைத்துத் துறைகளிலும் இருந்து நலிந்த மாணவ, மாணவிகள் 250 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலில் 150 பேருக்கு சிற்றுண்டி தரப்படுகிறது. வாரத்துக்கு 3 நாள்கள் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். மீதமுள்ள மாணவிகளுக்கும் விரைவில் சிற்றுண்டி தரப்படும்.
 மேலும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாள்களுக்கு ஒரு வேளைக்கு ரூ.2500 செலுத்தி சிற்றுண்டி வழங்கி உதவலாம் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com