எதிர்மறைச் சிந்தனையுடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர்: அமைச்சர்கள் பேச்சு

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடனே செயல்படுகின்றனர் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடனே செயல்படுகின்றனர் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
 புதுச்சேரி அரசு பொது நிர்வாகத் துறை சார்பில், கம்பன் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நல்லாட்சி, சிறந்த நிர்வாகம் தருவது குறிந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசியதாவது:
 வேளாண் அமைச்சர்
 கமலக்கண்ணன்: புதுச்சேரி மாநிலம் கடந்த 1980-க்கு முன்பு நிர்வாகத்தில் சிறந்து விளங்கியது. மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசு அதிகாரிகள் நிறைவேற்றினர். ஆனால், தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள நிலையில், திட்டங்கள் தொடர்பான கோப்புகள் பல நாள்கள் தேங்கும் நிலை உள்ளது.
 கோப்புகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து விடும் எண்ணத்திலேயே அதிகாரிகள் செயல்படுகின்றனர். இப்போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 போக்குவரத்து அமைச்சர் எப்.ஷாஜஹான்: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். ஆனால், அதிகாரிகள் பதவிக் காலம் 58 ஆண்டுகள் ஆகும். நாங்கள் யாரும் விதிகளை மீறி செயல்படுங்கள் எனக் கூற மாட்டோம். ஆனால், விதிகளுக்கு உள்பட்டும் எவரும் செயல்படுவதில்லை. அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடனே செயல்படுகின்றனர்.இப்போக்கை கைவிட வேண்டும்.
 நலத்துறை அமைச்சர்
 மு.கந்தசாமி: முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் மக்களுக்கு பதில் கூறும் பொறுப்பு உள்ளவர்கள். அதிகாரிகளுக்கு அத்தகைய சுமை எதுவுமில்லை. மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், எங்களை தேர்வு செய்ய மாட்டார்கள். மக்கள் நலனுக்காக கொண்டு வரும் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
 75 சத அதிகாரிகள் மக்கள் பணியை மேற்கொள்வதில்லை. பல துறைகளில் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்கின்றனர்.
 பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம்: சிறந்த நிர்வாக அனுபவம் வாய்ந்தவரான முதல்வர் நாராயணசாமி புதுவை மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபட்டு வருகிறார். ஆனால், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லையென்றால் அதை செய்ய முடியாது. தயக்கம், அச்சத்தால் அதிகாரிகள் கோப்புகளை விரைவாக அனுப்புவதில்லை.
 கடந்த ஆட்சியில் சட்டத்தை மீறி செயல்பட்ட அதிகாரிகளால் இந்த ஆட்சியில் மக்களுக்காக சட்டத்தை வளைக்க மறுக்கிறார்கள்.
 எவரும் சட்டத்தை மீறி செயல்படத் தேவையில்லை. மக்கள் நலனுக்காக சட்டத்தை வளைத்து செயல்படுங்கள் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com