மறைந்த முதல்வர் ராமசாமிக்கு புதுவை சட்டப்பேரவை இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
 இந்த நிலையில், இரண்டாவது நாளாக புதன்கிழமை பேரவை கூடியதும், மறைந்த முன்னாள் முதல்வர் ராமசாமிக்கு இரங்கல் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி வாசித்து கூறியதாவது:
 ராமசாமி, உள்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் சிறப்பாக பணிபுரிந்தவர். 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் தனது நிர்வாகத் திறமையால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
 அகில இந்திய அரசியலில் ஞானம் பெற்றவராக திகழ்ந்தார்.
 எனக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
 அவரது மறைவு புதுச்சேரி மாநிலத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் ஈடு செய்ய முடியாததாகும்.
 அன்பழகன்(அதிமுக): புதுச்சேரி அதிமுக சார்பில் முதல் முதல்வராக பதவியேற்று பெருமை சேர்த்தவர். தொடர்ந்து 2 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுக பெயர் வராத அளவுக்கு இரங்கல் தீர்மானத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டார். காழ்ப்புணர்வு காரணமாக மறைத்துள்ளனர். அதிமுகவை உங்களால் மறைக்க முடியுமா
 தவறை திருத்திக் கொள்ளுங்கள். அதிமுக சார்பில் 2 முறை முதல்வராக ராமசாமி தேர்வு செய்யப்பட்டவர் என்பதை பதிவு செய்ய வேண்டும். அவரது மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 லட்சுமி நாராயணன் (காங்.): சிறந்த வழக்குரைஞராக விளங்கிய ராமசாமி, சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர். சட்ட நுணுக்கங்கள், வாதத் திறமை மிக்கவர்.
 இரா.சிவா (திமுக): முன்னாள் முதல்வர் ராமசாமி தொடக்கக் காலத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அமைச்சர், முதல்வர் என பல பொறுப்புகளை வகித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவை புரிந்தவர்.
 கொறடா அனந்தராமன்: முன்னாள் முதல்வர் ராமசாமி தனது பணியால் மக்கள் மத்தியில் அப்பழுக்கற்ற தலைவராக திகழ்ந்தார். அவரை பார்த்து அமைதி, அரசியல் ஒழுக்கத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
 ஜே.ஜெயபால் (என்.ஆர். காங்.): மாநில வளர்ச்சிக்கு நல்ல பல திட்டங்களை ராமசாமி நிறைவேற்றினார். அனைவரையும் சமநிலையில் வைத்து பழகிய சிறந்த பொதுநலவாதியாக விளங்கினார்.
 அமைச்சர் நமச்சிவாயம்: முன்னாள் முதல்வரும், பிசிசி துணைத் தலைவருமாக இருந்த ராமசாமி, தான் வகித்த பதவிகளுக்கு ஏற்ப சிறப்பாக நடந்து கொண்டார். இளைய தலைமுறையினருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிய அற்புதமான மனிதர்.
 பதவிக்கு ஆசைப்படாத தன்மையுடன், சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். சிறந்த நிர்வாகி, அரசியல் தலைமையை புதுவை இழந்து விட்டது.
 பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: தனது கருத்தை வலிமையாக பதிவு செய்வார். அவரது அனுபவங்கள் அனைவருக்கும் நன்மை தருவதாக விளங்கியது. கடைசிக் காலத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தனது கருத்துகளை உரிய வகையில் சேர்த்து விடுவார் எனக் கூறினார்.
 அதே போல் மறைந்த நியமன எம்.எல்.ஏ. மேரி தெரசா, முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலு ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com