ஆளுநரின் உரை நீர்க்குமிழி போன்ற வெற்று உரை: மார்க்சிஸ்ட்

துணைநிலை ஆளுநர் உரை நீர்க்குமிழி போன்ற வெற்று உரையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

துணைநிலை ஆளுநர் உரை நீர்க்குமிழி போன்ற வெற்று உரையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக அந்தக் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
 ஆளுநரின் உரை என்பது முந்தைய ஆண்டில் அரசு நிறைவேற்றிய பணிகள், அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நிகழ் நிதியாண்டின் இலக்குகள் பற்றிய அரசின் கொள்கை அறிக்கையாகும்.
 ஆனால், ஆளுநர் உரையில் சொல்விளையாட்டும், அரசியல் சாகசகள் மட்டுமே நிறைந்ததாக உள்ளது. இது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் நீர்க்குமிழி போன்று இருக்கும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
 கடந்த ஆண்டில் (2016-2017) மொத்த ஒதுக்கீடான ரூ.6550 கோடியில் 93.80 சதம் செலவு செய்யப்பட்டதாகவும். முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது உண்மைக்கு சம்பந்தம் இல்லாத கருத்தாகும்.
 உயர் மதிப்பிலான ரூபாய் நீக்க நடவடிக்கை மாநில வளர்ச்சி மற்றும் சமூகநலத் திட்டங்களை மேற்கொள்ள தடையாக இருந்தன என்பதை ஆளுநர் உரை மூடிமறைக்கிறது.
 வீட்டுக்கொருவருக்கு வேலை, பஞ்சாலைத் தொழிலை நவீனப்படுத்துவது, முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம், உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்த திட்டம் உள்ளதா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
 நீட் தேர்வு முறையால் புதுச்சேரி மாணவர்கள் உரிமை பறிப்பு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் கல்விக் கட்டணக் கொள்ளை போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.
 இதிலிருந்து ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பணிகளையோ, வளர்ச்சித் திட்டங்களையோ அமலாக்கவில்லை என்பது தெளிவாகிறது. இதனை மூடிமறைக்கும் வகையில் ஆளுநர் உரை நீர்குமிழிப் போல உள்ளது என்றார் ராஜாங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com