மருத்துவ பட்டமேற்படிப்பு கட்டணம் குறித்து நிகர்நிலைப் பல்கலை.க்கு யூஜிசி உத்தரவு: ஆளுநர் கிரண் பேடி பாராட்டு

மருத்துவ பட்டமேற்படிப்பு கல்விக் கட்டணம் தொடர்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்ட பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மருத்துவ பட்டமேற்படிப்பு கல்விக் கட்டணம் தொடர்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்ட பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யூஜிசி) துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்டாக் மூலம் மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களில் சேர தேர்வான மாணவ, மாணவிகள், கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி, கடந்த 16-ம் தேதி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
 மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு கட்டணம் தொடர்பாக புதுச்சேரி அரசு கடந்த 14-ம் தேதி அளித்த கட்டண நிர்ணய உத்தரவில் வெறும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இருந்தது.
 ஆனால், புதுவையில் இயங்கும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும், 3 தனியார் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர்.
 இதனால் இடங்களுக்கு தேர்வு பெற்று கல்லூரிகளில் சேர தயக்கமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.
 இந்தப் பிரச்னையின் முக்கியத்துவம் கருதி ஆளுநர் கிரண் பேடி உடனே யூஜிசியின் செயலாளர் பேராசிரியர் ஜஸ்பால் சிங் சாந்துவிடம் தொலைபேசியில் பேசினார்.
 இதுதொடர்பாக உடனே தலையிடுவதாக அவர் அளித்த உறுதிமொழியின் பேரில் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
 48 மணிநேரத்தில் உத்தரவு: மேலும், 48 மணி நேரத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கல்விக் கட்டணம் தொடர்பான உத்தரவை யூஜிசி அனுப்பி உள்ளது. யூஜிசியின் இணைச் செயலாளர் சுனிதா ஸ்வாச் அனுப்பியுள்ள உத்தரவில் ஸ்ரீபாலாஜி வித்யா பீடம், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் யூஜிசி சட்டம் 2016-பிரிவு 6.1 கீழ் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.
 இதற்கான தகவலும் புதுச்சேரி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது தேவையான நடவடிக்கையை யூஜிசி எடுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 இதற்காக யூஜிசி அமைப்புக்கு ஆளுநர் கிரண் பேடி பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com