129 புதிய காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி தொடக்கம்

கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில், 129 புதிய காவலர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சியை டிஜிபி சுனில்குமார் கெளதம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

கோரிமேடு ஆயுதப்படை காவல் மைதானத்தில், 129 புதிய காவலர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சியை டிஜிபி சுனில்குமார் கெளதம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுச்சேரி காவல் துறைக்கு புதிதாக 129 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், சட்ட வகுப்புகள், கவாத்து பயிற்சி, ஆயுதப் பயிற்சி, கணினி பயிற்சி, அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையைப் பார்வையிடல், கிருமாம்பாக்கம் தடயவியல் ஆய்வகத்தைப் பார்வையிட்டு அறிதல், மலையேற்றம், நீச்சல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுதல், கனரக வாகனங்கள் இயக்குதல்,  துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. சிறப்புப் பயிற்சியாக ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளும் கற்பிக்கப்பட உள்ளன.
கம்யூனிட்டி போலீஸிங் என்ற தலைப்பில், கிராமத்தில் தங்கியிருந்து பயிற்சி பெறும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அதோடு, களப் பயணம் என்ற வகையில் ஏனாம், மாஹே, காரைக்கால் போன்ற பிராந்தியங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பதிவு செய்யப்படும் வழக்குகள், அவற்றை புலன் விசாரணை செய்யும் விதம், குற்றவாளிகள் விவரங்களை பதிவு செய்தல், பொதுமக்கள் நல்லுறவு, புகார்தாரரிடம் விசாரிக்கும் விதம் குறித்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சீனியர் எஸ்பி அபூர்வ குப்தா தலைமை வகித்தார். போலீஸ் பயிற்சிப் பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் வரவேற்று பயிற்சி விவரங்களை எடுத்துக்கூறினார். எஸ்பிக்கள் (ஓய்வு) சண்முகசுந்தரம், மஞ்சம் பிரசாத்ராவ், வழக்குரைஞர் சந்திரசேகரன், எஸ்ஐக்கள் (ஓய்வு) அரிக்குமார், கோபால், கோரிமேடு பொது ஆய்வகம் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இந்தப் பயிற்சி 12 மாதங்கள் அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com