ஆசிரியர்கள் நினைத்தால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்: முதல்வர் நாராயணசாமி தகவல்

ஆசிரியர்கள் நினைத்தால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் நினைத்தால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
 புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் தின விழா அரியாங்குப்பம் பூரணாங்குப்பம் தனியார் திருமண நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 அரசு கல்வித்துறை இயக்குநர் குமார் வரவேற்றார். அனந்தராமன் எம்ஏல்ஏ, அரசுச் செயலர் சுந்தரவடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.
 முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:
 கல்வியில் புதுவை மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் போதவில்லை. நிதி கேட்டு மத்திய அரசின் கதவை தட்டி வருகிறோம்.
 புதுச்சேரியை பொறுத்தவரை அனைத்துத் தரப்பினரும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
 நகர்ப்புறங்களில் தரமான கல்வியை தனியார் பள்ளிகள் தருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வெற்றி பெறச் செய்து வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும்.
 ஆசிரியர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அரசு என்ன செய்ய வேண்டும், ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுடன் கலந்துரையாடினோம். அதுபோன்ற நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு மாணவர்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டும் வெற்றி கூடுதல் ஆகும்.
 மத்திய அரசு அடிக்கடி பாடத்திட்டத்தை மாற்றி, புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. மத்திய அரசின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப மாநில அரசின் பாடத்திட்டமும் இருக்க வேண்டும்.
 ஆசிரியர்கள் நினைத்தால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு எழுத்து ஞானம் இருக்கும். தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று வங்கிகளில் பணிபுரிவார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த அனுபவம் இருக்கும், சிறந்த தலைவர்களாக உருவாகுவார்கள்.
 நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
 மாணவிகளுக்கு நாப்கின்: 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 22 ஆயிரம் மாணவிகளுக்கு நாப்கின் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போது கல்வித் துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரத்துறை நிதி வழங்க காலம் தாழ்த்தினால், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றார் நாராயணசாமி. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கிருஷ்ணராஜூ நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com