கட்டுமானத் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திட்டம்: முதல்வர் தகவல்

கட்டுமானத் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரி தொழிலாளர் துறையின் கட்டட மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில், கட்டடத் தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா, தீபாவளி வெகுமதி கூப்பன் வழங்கும் விழா ஆகியவை ரெட்டியார் பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 தொழிலாளர் துறை ஆணையர் இ.வல்லவன் வரவேற்றார். நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார். பேரவைத் துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து, எம்என்ஆர்.பாலன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, கட்டடத் தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு கூப்பன்களை வழங்கிப் பேசியதாவது:
 மணல் தட்டுப்பாடு, மனைகளைப் பிரித்து விற்பதற்கு தடை போன்ற காரணங்களால் கட்டடத் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்டடத் தொழிலாளர்களுக்கான திட்டங்களை நல வாரியம் முறையாக நிறைவேற்றி வருகிறது.
 மேலும், கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர் என்னை சந்தித்து தீபாவளிக்கு அதிக நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக நானும், அமைச்சரும் கலந்து பேசினோம். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்கு இடையே நிதியை ஆராய்ந்து பார்த்து உதவி செய்வதாக தெரிவித்துள்ளேன். புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக முனைந்து பாடுபட்டு வருகிறோம். கடந்த காலங்களில் ரூ. 6 ஆயிரம் கோடியாக இருந்த பட்ஜெட்டை ரூ. 8 ஆயிரம் கோடியாக உயர்த்தி உள்ளோம். கடந்த காலங்களில் ரூ. 3 ஆயிரம் கோடிதான் அரசின் வருவாயாக இருந்தது. இதை ரூ. 4 ஆயிரம் கோடியாக உயர்த்தி இருக்கிறோம்.
 மேலும், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து புதுவைக்கு நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மத்தியில் இருப்பது மாற்று ஆட்சி. நாம் எதிர்பார்ப்பதை அவர்கள் உடனடியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. இருப்பினும், தொடர்ந்து வலியுறுத்தினால் கண்டிப்பாக விடிவு பிறக்கும் என்று நினைக்கிறேன்.
 இந்தச் சூழ்நிலையில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற காலதாமம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் அரிசிக்கு கோப்பு அனுப்பினால் 3 மாதங்களுக்கான ஒப்புதல் ஆளுநரிடமிருந்து வரும்.
 ஆனால், தற்போதைய ஆளுநர் ஒவ்வொரு மாதமும் கோப்பு அனுப்ப வேண்டும் என கூறுவது மட்டுமல்லாமல், அதனைத் திருப்பி அனுப்புகிறார்.
 நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆளுநர்தான் முட்டுக்கட்டை போடுகிறார். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது எந்தத் தடை வந்தாலும், அதனை தகர்த்தெறிய வேண்டும்.
 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திட்டம், காப்பீடு திட்டம், இருதய நோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை பெற நிதியுதவி அளிக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 நிகழ்ச்சியில் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் அதிகாரிகள், கட்டடத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் அதிகாரி வின்சன்ட் ஞானசாமி அமல்ராஜ் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com