வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: ஆட்சியர்

வீட்டின் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டின் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: துணைநிலை ஆளுநர் கிரண் பேடி முன்னிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நலவழித் துறை,  உள்ளாட்சித் துறை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையினரும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடந்த 6-ஆம் தேதி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறை சட்டம், 1973-இன் கீழ், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட காலி மனைகளில் உள்ள புதர்கள், குப்பைகளை 12 நாள்களுக்குள் (அக். 18-ஆம் தேதிக்குள்) அகற்றி, அவற்றைச் சுத்தப்படுத்தும்படி அதன் உரிமையாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.மேற்படி, ஆணையை மீறுவது அல்லது புறக்கணிப்பது என்பது பொதுமக்களின் உயிருக்கும், உடல் நலத்துக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய செயலாகும்.
அவ்வாறு மீறினால், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக் கூடிய குற்றமாகும். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆணையின்படி, காலிமனை உரிமையாளர்கள் தங்களது மனையைச் சுத்தம் செய்து, சுற்றுப் புற சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும்,  சுகாதாரத்தோடு வாழவும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், பொதுமக்களும் தாமாக முன்வந்து, தங்களது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பாதுகாப்பது கொசு உற்பத்தியைத் தடுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com