இன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்த நாள் விழா

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 95-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை (செப். 16) புதுச்சேரியில் நடைபெறுகிறது.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 95-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை (செப். 16) புதுச்சேரியில் நடைபெறுகிறது.
 இதுதொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர்கள் க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (படம்) செப். 16-ஆம் தேதி தனது 95- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த எழுத்தாளுமையின் பிறந்த நாளைப் பெருவிழாவாகப் புதுச்சேரி இலக்கிய வெளி கொண்டாடுகிறது. புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரே உள்ள புதுவைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்ல மாநாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை விழா நடைபெற உள்ளது. விழாவில் கி.ராஜநாராயணன் எழுதிய, அவர் குறித்த நூல்கள் வெளியிடப்பட உள்ளன. கலை நிகழ்வுகள், கி.ரா.வின் வாழ்வு தொடர்பான ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன. "வாகை முற்றம்' என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.
 தொடர்ந்து, மாலையில் நடைபெறும் வாழ்த்தரங்கத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகிக்கிறார். கி.ரா.வின் நூல்களை நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, பொதுவுடைமை இயக்கத்தின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொள்கிறார்.
 திரைப்படக் கலைஞர் சிவக்குமார், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எஸ்.ஏ. பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நூல் ஆய்வுரை நிகழ்த்துகிறார். எழுத்தாளர் கி.ரா. ஏற்புரையாற்றுகிறார். முன்னதாக, வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வரவேற்கிறார்.
 கரிசல் விருதுகள்: விழாவில் "கரிசல் விருது 2017' வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான கரிசல் இலக்கிய விருது தளம் இலக்கியக் காலாண்டு இதழுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த எழுத்தாளருக்கான கரிசல் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com