மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கம், தனியார் கல்லூரி நிர்வாகங்களே பொறுப்பேற்க வேண்டும்

மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கமும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.

மருத்துவ மாணவர்களின் நிலைக்கு அதிகார வர்க்கமும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
 புதுவையில் கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலை, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிகளை மீறி இளநிலை மருத்துவப் பாடப் பிரிவில் சேர்க்கப்பட்ட 770 மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 இந்த நிலையில், லாஸ்பேட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர், ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள், விதிகளை மீறி புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலை.களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் எம்சிஐ விசாரணை செய்து சேர்க்கையை ரத்து செய்துள்ளது. இதனால் அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த நிலைக்கு அதிகார வர்க்கமும், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
 நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தாக்கல் செய்த அறிக்கையில் மாணவர் சேர்க்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து கூறியுள்ளார். ஆனால் அதைச் சரிசெய்யாமல் முறைகேடு நடந்துள்ளது தெளிவாகப் புலனாகிறது. அவரது கருத்துகள் ஏற்கப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
 மாணவர் சேர்க்கையை மேற்பார்வையிட வேண்டிய சுகாதாரத் துறை, சென்டாக் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. இந்த பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலரிடம் அறிக்கை கோரியும் இன்னும் வரவில்லை.
 மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 நிகழ் கல்வியாண்டில் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கெüடு நியமிக்கப்பட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கை முறையாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
 இந்த விவகாரத்தில் அனைவரும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து மாணவர்கள், பெற்றோர் நலனைக் காக்க வேண்டும் என்றார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com