பேரவை விவாதத்தில் பங்கேற்றால் ரங்கசாமியின் சாயம் வெளுத்துவிடும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

சட்டப்பேரவை விவாதத்தில் பங்கேற்றால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சாயம் வெளுத்துவிடும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.

சட்டப்பேரவை விவாதத்தில் பங்கேற்றால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் சாயம் வெளுத்துவிடும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவைக் குழு அரங்கில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தன்னுடைய கடமையில் இருந்து தவறிவிட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் மாதந்தோறும் அரிசி, முதியோர், விதவை உதவித் தொகை அளித்ததாகக் கூறுகிறார். 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகளுக்கு அரிசி வழங்கப்படவில்லை.
தற்போது எங்களது ஆட்சியில் அனைத்துவிதமான நலத் திட்ட உதவிகளும் காலத்தோடு வழங்கப்படுகின்றன. புதுவை மாநிலத்தையும், நிர்வாகத்தையும் மோசமான நிலைக்குத் தள்ளியதே ரங்கசாமி ஆட்சிதான்.
தற்போது சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு, வருவாயை ரூ. 180 கோடியாக உயர்த்தியுள்ளோம். சட்டம் - ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் புதுவை மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனவே, எங்களின் ஆட்சியைப் பற்றிக் குறைக்கூற ரங்கசாமிக்கு தகுதியில்லை.
சட்டப்பேரவைக்கு வரும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 நிமிடங்களிலேயே வெளியேறி விடுகின்றனர். எங்களுடன் அவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டால், அவர்களுடைய சாயத்தை நாங்கள் வெளுத்துவிடுவோம். அதற்குப் பயந்தே அவர்கள் சட்டப்பேரவைக்கு வருதில்லை. வந்தாலும் இருப்பதில்லை.
சென்னையில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுத்திருக்கலாம் என ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கெனவே, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24-ஆம் தேதி புதுச்சேரி வந்த போது, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நேரில் கடிதம் கொடுத்தோம். அதன் பின்னர், மார்ச் 9-ஆம் தேதி பிரதமருக்க நினைவூட்டல் கடிதம் அனுப்பினோம். மார்ச் 26-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.
நிலைமை இவ்வாறு இருக்கும்போது, சென்னையில் சந்தித்து வலியுறுத்திருக்க வேண்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
காரைக்கால் பகுதியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் காவிரி நதிநீர் குறித்து இதுவரை வாய்த் திறக்கவில்லை. ரங்கசாமி உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நானும், பேரவைத் தலைவரும், பேரவைத் துணைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சிக்குச் சென்று ரஷியா, பிரான்ஸ் நாடுகள் மற்றும் இஸ்ரோ நிறுவனத்துடன் பேசி, ராணுவத் தளவாடங்கள் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழில் சாலைகளை புதுவையில் அமைப்பது தொடர்பாக முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தொடர்ந்து அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரதமர் நரேந்திர மோடியின் முகவராகச் செயல்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மெளனமாக இருந்துவிட்டு, இப்போதுதான் வாய்த் திறக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த விஷயத்தில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் எதிர்ப்போம்.
ஆனால், சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில், ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொண்டு, குறை கூறிக் கொண்டிருப்பது நியாயமற்ற செயலாகும். அந்தக் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களும், அந்தக் கட்சித் தலைவர் ரங்கசாமியும் கூட்டத்தைப் புறக்கணித்தார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்து, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று அரசின் சார்பில் கூட்டப்பட்டக் கூட்டத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
காவிரி நதிநீர் தொடர்பாக வழக்குத் தொடுத்ததாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ரங்கசாமி கூறியுள்ளார். ஆனால், வழக்கைத் தொடர்ந்து நடத்தி, இடைக்கால உத்தரவில் 6 டி.எம்.சி. தண்ணீர் என்பதை தற்போது 7 டி.எம்.சி.யாகப் பெற்றுள்ளோம்.
அதுமட்டுமன்றி, தமிழகத்தில் குருவை சாகுபடி செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்காத நிலையில், காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு குருவை சாகுபடி செய்வதற்கான அனுமதியை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பெற்றுள்ளோம். இது எங்களது அரசின் சாதனையாகும். நீதிமன்றத் தீர்ப்பை ரங்கசாமி முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் பிறகு விமர்சனம் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மறைமுகமாகவோ, நேரடியாகவே உதவி, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ரங்கசாமியும், அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் எங்களது அரசு கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அண்மையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை ரங்கசாமி தில்லி சென்று சந்தித்தார். எதற்காக அவர் சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை சந்தித்த போது, ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை?
காரைக்கால் பகுதி விவசாயிகள் என்.ஆர்.காங்கிரஸை புறக்கணித்து விட்டார்கள் என்பதற்காகவே தற்போது ஞானோதயம் வந்தவர் போல ரங்கசாமி பேசுகிறார் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com