அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீஸாருக்கு பரிசு: முதல்வர் அறிவிப்பு 

அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கு குறித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலக்கிய அதிரடிப்படை போலீஸார் 16 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார். 

அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கு குறித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலக்கிய அதிரடிப்படை போலீஸார் 16 பேருக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
 புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வந்தவர் ராதே ஷ்யாம் தூத்(45). இவர், நெல்லித்தோப்பு பிரதான சாலையில் நகை அடகுக் கடை நடத்தி வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடகுக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ராதே ஷ்யாம் தூத்தை கொலை செய்துவிட்டு, கடையில் இருந்த ரூ.1.6 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
 இது குறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். எந்தத் துப்பும் கிடைக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 வழக்கில் எதிரிகளான கோபிநாத், அருண், சுயம்ஜோதி ஆகியோரை அதிரடிப்படையினர் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும், கொள்ளையடித்த நகைகளை திருவாரூரில் விற்பனை செய்ய உதவிய கோபிநாத்தின் உறவினர் கோகுலகிருஷ்ணன், திருவாரூரைச் சேர்ந்த அஜய்சேட் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 புதுச்சேரியை உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலக்கி எதிரிகளை கைது செய்த அதிரடிப்படை போலீஸாரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தலா ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை இரவு அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com