சரக்கு போக்குவரத்து வரி வருவாய் 20 சதவீதமாக உயரும்: அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு தகவல் 

மின்னணு பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டதால் புதுவை மாநிலத்தின் சரக்கு போக்குவரத்து வரி வருவாய் 2018-19-ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக உயரும் என்று,

மின்னணு பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டதால் புதுவை மாநிலத்தின் சரக்கு போக்குவரத்து வரி வருவாய் 2018-19-ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக உயரும் என்று, அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி தெரிவித்தார்.
 இது குறித்து செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 புதுவையில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. புதுவை அரசு தனிக் கணக்கு தொடங்கியதால் நிதிப் பற்றாக்குறை உருவாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டது.
 பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார நடவடிக்கைகள் சுருங்கிவிட்டன. 5 ஆயிரம் ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் மாதம்தோறும் வழங்காததால், வாங்கும் சக்தி குறைந்து வியாபாரத்தின் வளர்ச்சி தடைபட்டது.
 அரசின் சிக்கன நடவடிக்கையால் இந்த ஆண்டு ரூ.180 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.
 கடந்த 2013-14-இல் வரி வருவாயின் வளர்ச்சி பூஜ்ஜியமாக இருந்தது. தற்போது, வரி
 வருவாயின் வளர்ச்சி, மற்ற மாநிலங்களுக்கு இணையாக 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
 இதற்காக ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகியோருக்கு பாராட்டுகள். தற்போது நடந்து முடிந்த யூனியன் பிரதேச மாநாட்டில் ஆளுநர், புதுச்சேரி அரசின் நிதி நிலைமை சீரடைந்துள்ளது என பதிவு செய்துள்ளார். மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்து பரிவர்த்தனையை மின்னணு மூலம் (இ.வே பில்) நடைமுறைப்படுத்துவதால், வரி வருவாய் 2018-19-இல் 20 சதவீதமாக உயரும்.
 மேலும், வரும் காலங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை புதுவை அரசு விரைவாக எடுக்க வேண்டும். அரசு விதிகள், ஆணைகளுக்கு உள்பட்டு அதிகாரிகள் செயல்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் சுமார் ரூ.500 கோடியை பொதுமக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட முடியும். புதுவைக்கான தனிக் கணக்கை திரும்ப பெறச் செய்தால், மத்திய அரசு வழங்கும் நிதி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயரும். மத்திய அரசு வழங்கிய நிலக்கரியை திரும்பப் பெற்றால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி புதுவை அரசுக்கு வரியில்லா வருவாயாக கிடைக்கும்.
 அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை மத்திய அரசே வழங்க நடவடிக்கை எடுத்தால், புதுவை அரசுக்கு ரூ.650 கோடி மீதமாகும்.
 முதல்வர் நாராயணசாமி இந்தக் கருத்துகளை செயல்படுத்தினால் வரும் காலங்களில் பொதுமக்களின் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தலாம்.
 புதுவையில் பணிக் கலாசாரத்தை சீரமைப்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. அதனால்தான் ஊழியர்கள் தாமதமாக வரும் சூழல் உள்ளது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்தால் ஊழல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
 ஆனால் ஆட்சியாளர்களும், உயர் அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டியவர்களை தொடர்ந்து அதே துறையில் 5 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிய வைத்துள்ளனர். இதுவே பணி கலாசார சீரழிவுக்கு காரணம் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com