இளைஞர் கொலை வழக்கு: சிறுவன் உள்பட 6 பேர் கும்பல் கைது 

புதுச்சேரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

புதுச்சேரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் உத்திரவாகினிப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (23). மாட்டுவண்டித் தொழிலாளி. இவர், தனது நண்பர்கள் ஜெகதீஷ், ரவீந்திரன், ரத்தினம் ஆகியோருடன் வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பேசிக்கொண்டிருந்தார்.
 அப்போது, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
 இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெகதீசன், ரவீந்திரன், ரத்தினம் ஆகியோர் காயமடைந்தனர்.
 இது தொடர்பாக வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 அதில், வில்லியனூர் பெரியபேட்டை ரவி (எ) ரவிவர்மன், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுகன், வில்லியனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன், உத்திரவாகினிப்பேட்டை தனசரண், பெரியபேட்டை சத்தியமூர்த்தி(எ)பூச்சி மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
 இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கடலூர் மாவட்டம், அழகிய நத்தம் கிராமத்தில் போலீஸார் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 அதில் கொலை செய்யப்பட்ட ஏழுமலையின் நண்பரான பாலகிருஷ்ணன், ரவிவர்மன், ஐயப்பன் ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு சுகன், அஜீத், அலன், குறளரசன் ஆகியோருடன் சேர்ந்து பாலகிருஷ்ணனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால், பாலகிருஷ்ணனுக்கும், ரவிவர்மனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்படவே, பாலகிருஷ்ணன் தனது நண்பரான ஏழுமலையுடன் சேர்ந்து ரவிவர்மனையும், சுகனையும் கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
 மேலும், அவர்களின் கூட்டாளியான தனசரணை ஏழுமலை மிரட்டியுள்ளார். இதனால் ஏழுமலையால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று நினைத்து அவருக்கு முன்பு நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து ரவிவர்மன் உள்ளிட்டோர் ஏழுமலையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 இதற்காக, செவ்வாய்க்கிழமை ஏழுமலை, நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்ததை நோட்டமிட்டு சத்தியமூர்த்தியும், சிறுவனும், ரவிவர்மனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த ரவிவர்மன், சுகன் , ஐய்யப்பன், தனசரன் ஆகியோர் சேர்ந்து ஏழுமலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
 ஜெகதீஷ் உள்ளிட்டோரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
 இதையடுத்து அவர்களிடம் இருந்த வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 6 பேரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும், ரவிவர்மன் உள்ளிட்ட 5 பேரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 ஆயுதம் வழங்கிய பெருமாளை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com