புதுவையில் 3.31 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: விநியோகத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்

புதுவை மாநிலத்தில் 3.31 லட்சம் பேருக்கு ரூ.6.36 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

புதுவை மாநிலத்தில் 3.31 லட்சம் பேருக்கு ரூ.6.36 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
 புதுவையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அரசு முடுக்கிவிட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் விநியோகப் பணியை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
 புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 244 குடும்ப அட்டைகளுக்கு ரூ.6.33 கோடி செலவில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
 இதன் தொடக்க நிகழ்ச்சி உருளையன்பேட்டை கோவிந்தசாலையில் உள்ள நியாய விலைக் கடையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
 இதில் முதல்வர் வே.நாராயணசாமி கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தார். இதில் பச்சரிசி 1 கிலோ, பச்சைப்பயறு, வெல்லம் தலா அரை கிலோ, முந்திரி 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் ஆகிய 5 பொருள்கள் இடம் பெற்றுள்ளன.
 மேலும், இந்த நிகழ்ச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் பணியையும் முதல்வர் தொடக்கிவைத்தார்.
 சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தனவேலு, இரா. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: புதுச்சேரி கூட்டுறவுச் சங்க நியாய விலைக்கடை ஊழியர்கள், 14 மாத நிலுவை ஊதியம் கேட்டு, கடந்த ஜன.10 முதல் கடையை மூடி போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் கந்தசாமி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 2 மாத ஊதியத்தை உடனடியாகத் தருவதாகவும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விநியோகம் செய்யும்படியும் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு சனிக்கிழமை முதல் பணிக்குத் திரும்ப நியாயவிலைக்கடை ஊழியர்கள் முடிவு செய்தனர்.
 ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகள் முன்னிலையில் வருகிற ஜன.23-ஆம் தேதி நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 விழாவில் காணாமல் போன முதல்வரின் தங்கப் பேனா
 புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவின் போது, முதல்வர் வே.நாராயணசாமியின் தங்கப் பேனா திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
 புதுவையில் மாநில அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை தொடக்கி வைத்தார். உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட கோவிந்தசாமி சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற முதல்வருக்கு பல்வேறு நிர்வாகிகள், அதிகாரிகள் சால்வை அணிவித்தனர். அப்போது, திடீரென தனது சட்டைப்பையில் வைத்திருந்த தங்கப் பேனாவை முதல்வர் நாராயணசாமி பார்த்தபோது, அதைக் காணவில்லை. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு அணிவிக்கப்பட்ட சால்வைகளை அகற்றும்போது பேனா காணாமல் போய் இருக்கலாம் என்று கருதி அதிகாரிகளும், காவலர்களும் தேடிப் பார்த்தனர். இதனிடையே நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, பெண் ஒருவர், கீழே கிடந்ததாகக் கூறி தங்கப் பேனாவை கொண்டு வந்து முதல்வரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பரபரப்பு அடங்கியது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com