புதுவையில் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படுமா?

புதுவையில் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.5.86 கோடி தேவையின்றி செலவு செய்யப்படுகிறது.
புதுவையில் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படுமா?

புதுவையில் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.5.86 கோடி தேவையின்றி செலவு செய்யப்படுகிறது.
 எனவே, தமிழகத்தைப் போல மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 புதுவையில் 2010-ஆம் ஆண்டு ரங்கசாமி ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில், மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் 58 பேருந்துகள், காரைக்காலில் 12 பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இதற்காக கடந்த ஆண்டு மட்டும் ரூ.5.86 கோடி அரசு செலவு செய்தது.
 புதுச்சேரியில் 26 வழித்தடங்களிலும், காரைக்காலில் 7 வழித்தடங்களிலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 பேருந்துகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து அவருக்கு ஓராண்டுக்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 216 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் முற்றிலும் தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதால், முறைகேடு நடைபெறுவதாக பொதுநல அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
 இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் பி.ரகுபதி கூறியதாவது:
 புதுவையில் பள்ளி மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுவிட்டன. மேலும், புதுவையை பொருத்தவரை 80 சதவீத மாணவ, மாணவிகள் தங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளிலேயே படிக்கின்றனர்.
 இந்த நிலையில், அரசியல்வாதிகள் கையில் தான் தனியார் பேருந்துகள் உள்ளன. எனவே, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி பணத்தை விரயம் செய்கின்றனர். இந்த பேருந்துகள் பெரும்பாலும் கூட்டமின்றி காலியாகவே செல்கின்றன. இத்திட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூட டீசல் கட்டணம் வழங்கப்படுகிறது.
 பள்ளிகளில் மாணவ, மாணவிகளை இறக்கிவிட்ட பிறகு சிறப்புப் பேருந்துகள் ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தப்படுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு இந்தத் திட்டத்தை ஒதுக்கினால் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி இறக்கிவிட்ட பிறகு மீதி நேரங்களில் பொதுமக்களின் சேவைக்கு பயன்படுத்த முடியும்.
 இதன் மூலம், புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். நஷ்டத்தின் அளவையாவது குறைக்க முடியும்.
 இல்லையெனில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் கல்வித் துறைக்கு ஓராண்டுக்கு சுமார் ரூ.4 கோடி பணம் மிச்சமாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com