சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

புதுச்சேரி பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

புதுச்சேரி பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
 சோரியாங்குப்பத்தில் பொங்கல் பண்டிகையின் 5-ஆவது நாளன்று தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு ஆற்றுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவில் பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, குடியிருப்புப்பாளையம், கரைமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் அமைந்துள்ள கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சுவாமி சிலைகள், டிராக்டர், மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
 விழாவில் பாகூர், சோரியாங்குப்பம், புதுச்சேரி, தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், புதுச்சேரி தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் எஸ். அப்துல் ரகீம் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்களும், மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com